2025 மே 01, வியாழக்கிழமை

வன்முறைச்சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கம்: டில்வின் சில்வா

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

'அளுத்கமை  தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களின் பின்னணியில் அரசாங்கமே உள்ளது. இந்த நாட்டில் இனவாதத்தை உருவாக்கி இனங்களை மோத விடுகின்ற வேலையை ராஜபக்ஷவின் குடும்பம் மேற்கொண்டு வருகின்றது' என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

'அளுத்கமை தர்காநகர் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்களுக்கு முழுப்பொறுப்பையும் அரசாங்கமே எடுக்கவேண்டும். இனங்களை மோதவிட்டு அதனூடாக அரசியல் நடத்தும் வேலைகளையே இந்த அரசாங்கம் செய்து வருகின்றது'  என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாலமுனை பிரதேசத்தில் புதன்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'ஊழல், மோசடி, வன்முறை இவ்வாறுள்ள இந்த அரசாங்கத்திற்குத்தான் இன்று அமைச்சர்களான ஹக்கீம், றிசாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான், ஹிஸ்புல்லாஹ், தொண்டமான் போன்றோர் ஆதரவளிக்கின்றனர்.

இன்று மக்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் பக்கம் மக்கள் நாளந்தம் வந்து கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் மக்கள் விடுதலை முன்னணி எதிர்காலத்தில் மாபெரும் எழுச்சி காணும். 
இனவாத,  மதவாத அடிப்படைவாதிகளால் இழைக்கப்படும் துரோகத்தை வளர்க்கும் பொறியில் சிக்கி விடக்கூடாது.

பொறுமையாகவும் அமைதியாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.  சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற வேறுபாட்டுக்கு அப்பால் தேசிய ஒற்றுமைக்காக ஒன்று படவேண்டும்' என அவர் மேலும் இங்கு தெரிவித்தார்.

இதேவேளை, 'இலங்கையில் ஏழைகள் அதிகம் நிறைந்த மற்றும் வறுமை கூடிய முதலாவது மாகாணம் ஊவா மாகாணமாகும். இந்தப்பட்டியலில் இரண்டாமிடத்தை கிழக்கு மாகாணமும் மூன்றாமிடத்தை வடக்கு மாகாணமும் பெறுகின்றது' என்றும் டில்வின் சில்வா தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகர் 

'ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் செய்தியை கடந்த மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. ராஜகபக்ஷ மீது மக்களின் எதிர்ப்பு அதிகரித்து வருகின்றது. மக்கள் மத்தியில் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டு மக்களை மோதவிடுகின்ற இந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் ஒன்றுபட்டு விட்டார்கள்.

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜகத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி குரல் கொடுத்து வருவதுடன் அழிவிலிருந்தும் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

யுத்தம் முடிந்து ஐந்தாண்டுகளில் இந்த நாட்டில் பொருட்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளது. அரிசி, மீன் மற்றும் மறக்கறி என அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 25000 ரூபா செலவுக்காக தேவைப்பட்டது. தற்போது 49000 ரூபா பணம் மாதமொன்றுக்கு ஒரு குடும்பத்திற்கு தேவைப்படுகின்றது.

நாட்டில் அரசாங்க மற்றும் தனியார் உத்தியோகத்தர்களுக்கு எவ்வித நிவாரணமோ முன்னேற்றமோ இல்லை. 

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் நூற்றுக்கு நாற்பது வீதமான நிதி ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குமே அவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஹலால் பிரச்சினை மற்றும் ஹிஜாப், தொப்பி போன்றவற்றை வைத்து பூச்சாண்டி காட்டிய இவர்கள் இன்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

இந்த அரசாங்கத்தின் முழு ஆதரவுடனேயே வன்முறைச்சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.  முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச்சம்பவங்களுக்கு எதிராக எமது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குரல் கொடுத்தார்.

இன்று மக்கள் விடுதலை முன்னணி வளர்ச்சிப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணியினை மக்கள் அரவணைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு இருந்த கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி புதிய இளம் தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி இன்று வீறுநடை போட்டு வளர்ச்சி கண்டு வருகின்றது.

1994ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்களை சந்தித்தோம்.

இன்று இங்கு திறக்கப்பட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தின் ஊடாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டம் பூராவும் கொண்டு செல்லப்படும்' என அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • jeyarajah Thursday, 26 June 2014 12:07 PM

    இந்த வன்முறைக்கு காரணம் பொறாமை. மற்றவர்கள் என்னை விட நல்லாக இருக்க கூடாது என்ற எண்ணம். சும்மா இருந்து களவு எடுத்து சாப்பிட பழக்கப்பட்டு விட்டார்கள்.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Thursday, 26 June 2014 01:33 PM

    நாடறிந்த ரகசியம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .