2025 மே 01, வியாழக்கிழமை

விடிவுக்காக தியாகம் செய்த அத்தனை தமிழர்களும் தியாகிகள்: துரைரத்தினம்

Kanagaraj   / 2014 ஜூன் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர்த் தியாகம் செய்த அத்தனை தமிழ் உறவுகளும் தியாகிகளேயாகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரத்தினம் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எப்.எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால் தியாகிகள் தினம் மட்டக்களப்பிலுள்ள அதன் அலுவலகத்தில் நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் செயலாளரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி உறுப்பினர்களும் உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அங்கு தொடாந்துரையாற்றிய அவர்,

கடந்த 24 வருடங்களாக நாம் தியாகிகள் தினத்தை அனுஷ்;டித்து வருகின்றோம். அதில் மூன்று நான்கு ஆண்டுகள் இத் தினம் அனுஷ்டிக்க முடியாமல் போனது.
 
கடந்த 35 வருடங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11000 தமிழர்கள் இந்த யுத்தத்தினால் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவருமே தியாகிகளாகும். இவர்கள் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடிவுக்காகவே உயிர் நீத்தார்கள் இதில் பல தமிழ்க்கட்சிகளில்; இருந்தும் உயிரிழந்துள்ளார்கள்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 345 கிராம சேவையாளர் பிரிவுகளும் உள்ளன. இதில் கடந்த 35 வருடங்களில் இந்த 11000 தமிழர்கள் யுத்தத்தினால் உயிரிழந்துள்ளார்கள்.
 
இதில் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் ஈ.பி.ஆர்.எல்.எப்.எனப்படும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிலிருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் 1400 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
மனைவி கணவனையும், தாய் தந்தை தனது பிள்ளையையும், சகோதரி சகோதரனையும் இழந்துள்ளார்கள் குடும்பத்திலிருந்து ஆறு உறவினர்கள் மற்றும் ஐந்து உறவினர்கள் நான்கு உறவினர்கள் என பலரும் தமது உறவுகளை இழந்துள்ளனர்.
 
இந்த உயிரிழப்பானது தமிழர்களின் விடிவுக்காக செய்த மிகப்பெரிய தியாகமாகும். ஒரே நாளில் 869 பேரை ஒரு சம்பவத்தில் எமது கட்சி இழந்திருக்கின்றது.
 
இந்தியாவிலும் 13 பேரை எமது கட்சி இழந்துள்ளது. ஓடி ஒழிந்து விடாமல் தமது சமூகத்திற்காக தமிழர்களின் விடுதலைக்காக கொல்லப்பட்டு உயிரிழந்தார்கள்.
 
எமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினைச் சேர்ந்தவர்கள் 727 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்தில் 342 பேரும் இன்னும் 342 பேர் அடையாளம் காணப்படாத இடங்களிலுமாக உயிரிழந்தனர்.
 
இவர்கள் உட்பட வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் விடிவுக்காக உயிர் துறந்து அனைவருமே தியாகிகளாகும். ஆந்த தியாகிகளை நாம் நினைவு கூருவது நமது கடமையாகும்.
 
நமது சமூகத்தின் விடுதலையை நோக்கி சர்வதேசம் சென்று கொண்டிருக்கின்றது. இந்த விடுதலையானது வலுப்பெறுமே தவிர நலிவடைந்து விடாது. இதற்கு தமிழ் தியாகிகள் செய்த தியாகம் தமிழ் உயிர்களை பலி கொடுத்த உறவுகள் செய்த தியாகமுமே இன்று சர்வதேச முன்னெடுப்புக்களுக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளது.
 
இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு தமிழர்களின் பொது எதிரியாகும். உலகிலேயே வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களை கொலை செய்த நாடு இலங்கையாகும்.
 
சர்வதேச சட்டத்தை மீறி இறையான்மையை மீறி மனிதாபிமானத்தை மீறி வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களை சுட்டு கொலை செய்த நாடு இலங்கையாகும்.
 
இறையான்மையைப் பற்றி பேசுகின்ற இலங்கை அந்த சட்டத்தை மீறியே வெள்ளைக் கொடியுடன் சென்றவர்களை சுட்டு கொலை செய்தது. வெள்ளைக் கொடியுடன் வருபவர்களை மனிதாபிமான ரீதியாக பார்;ப்பதே கடமையாகும்.ஆனால் அதை மீறி இலங்கை செயற்பட்டுள்ளது.
 
முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசாங்கம் திட்டமிட்டு வன்முறைகளை தொடங்கியுள்ளன. தமிழ் மக்களை கடந்த 30 வருடங்களாக அழித்த அரசாங்கம் இன்று முஸ்லிம்களை அழிக்கத் தொடங்கியுள்ளன.
 
முஸ்லிம்கள் மீது மேற் கொள்ளப்பட்டுவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக தமிழர்களாகிய நாம் குரல் கொடுக்க வேண்டும்.
 
தமிழர்களும், முஸ்லிம்களும் சிறுபான்மையினர். இந்த இரண்டு சமூகங்களும் ஒன்று பட்டு செயலாற்ற வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகள் இருக்கலாம்.
 
இந்த பிராந்தியத்தை நாம் எடுத்துக் கொண்டால் ஒரு கிராம் தமிழ் கிராமமாகவும், ஒரு கிராமம் முஸ்லிம் கிராமமாகவுமுள்ளது.
 
தமிழ் முஸ்லிம் மக்களிடையே இறுக்கமான உறவும் ஒரு பிணைப்பும் இருக்க வேண்டும். இவ்விரண்டு சமூகங்களும் ஒன்றினைந்து இந்த அரசாங்கத்தின் வன்முறைக் கெதிராக குரல் கொடுக்க வேண்டும்.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் திட்டமிட்டு தமிழர்களின் காணி அபகரிப்புக்கள் இடம் பெற்று வருகின்றன. திட்டமிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம் பெற்றுவருவதாக அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .