2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி பாரிய சவாலை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது: பசீர் சேகுதாவூத்

Menaka Mookandi   / 2014 ஜூலை 07 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளின் பாரிய சவாலை ஜனாதிபதியும் அரசும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக திறன் விருத்தி உற்பத்தி திறன் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் காத்தான்குடியிலுள்ள விசேட தேவையுடையோர் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்  மேற்கண்வடாறு கூறினார்.

நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் பசீர், 'இந்தியாவில் ஹிந்துத்துவ அடிப்படைவாத சிந்தனை தோற்றம் பெற்று இன்று ஹிந்துத்துவ அரசு தோற்றம் பெற்றிருப்பது போல இலங்கையில் சிங்கள பௌத்த அடிப்படைவாதம் தோற்றம் பெற்றுள்ளது. இது இலங்கை ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் பாரிய சவாலாக மாறியுள்ளது' என்றார். 

'இலங்கையில் ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் இது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக ஜனாதிபதிக்கும் அரசுக்கும் பாரிய சவாலாக உள்ளது. இதை வெற்றிகொள்வது தான் பெரிய வெற்றியாகும்.

மத அடிப்படைவாதம் என்ற பெயரால் முஸ்லிம்கள் நிந்திக்கப்படுகின்றனர். முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டு சவாலுக்கு உட்படுத்துகின்றனர். முஸ்லிம்கள் மார்க்க கலாசார வழிபாடுகளில் ஈடுபடுவதையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதுடன் அடிப்படைவாதம் என்ற பெயரால் முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் சேதப்படுத்தப்படுத்துகின்றனர்.

எல்லா மதங்களிலும் அடிப்படைவாதம் இருக்கின்றதை நாம் இன்று பார்க்கின்றோம். இந்தியாவில் ஹிந்து தீவிரவாதம் கொழுந்து விட்டு எரிகின்றது. ஹிந்து அடிப்படை வாதம் இந்தியாவின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேபோன்று இலங்கையிலும் சிங்கள பௌத்த அடிப்படை வாதிகளில் சில குழுக்கள் அடிப்படை சிந்தனை தோற்றுவித்துள்ளனர்' என்றார்.

இங்கு தமிழ் மக்கள் தமக்கான தீர்வை வெளிநாடுகளினூடாக பெற முயற்சிக்கின்ற வேளையில் இந்த சிங்கள பௌத்த அடிப்படை வாதக்குழுக்கள் தமிழ் மக்கள் மீது தமது பாய்ச்சலை செலுத்தமுடியாது போகவே இன்னுமொரு சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் மீது தமது பாய்ச்சலை தொடுத்துள்ளனர்.

ஓரளவு பொருளாதாரத்திலும், கல்வியிலும் எழுச்சி பெற்றுள்ள முஸ்லிம்கள் மீது தமது பாய்ச்சலை தொடுத்து செயற்பட்டு வருகின்றனர். இன்று உலகில் முஸ்லிம்களுக்கு எதிரான சதி மேற்கொள்ளப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. இன்று உலகில் ஒரு நாளைக்கு 20.000 முஸ்லிம்கள் மரணித்தால் அதில் 19999 பேர் கொல்லப்பட்டு மரணிக்கின்றார்கள்.

உலகில் முஸ்லிம்கள் கணக்கிலெடுக்கப்படாமல் இருந்தனர். ஆனால் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பிறகு ரஷ்யா சின்னாபின்னாமதையடுத்து அமெரிக்கா தனது நிருவாகத்தை உலகம் முழுவதிலும் செலுத்த முனைந்தது.

இந்த வகையிலேயே முஸ்லிம் உம்மாவின் ஒற்றுமையை சீர்குலைத்து முஸ்லிம்களை நசுக்கி விடுவதற்கும் முஸ்லிம்களை மலினப்படுத்தி அவர்களை ஓரங்கட்டுவதற்கும் அமெரிக்கா உட்பட ஐரோப்பா செயற்திட்டங்களை வகுத்து தமது சதி வேலையை ஆரம்பித்தது.

ஆப்கானில் தலிபான் மற்றும் ஈராக்கில் ஸிஆ சுன்னி இவ்வாறு முஸ்லிம்களிடையே தீவிரவாதத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைத்து மேற்குலகத்தின் ஆதிக்கம் வலுப் பெற்றுள்ளது. உலகத்தினை ஆட்சி செய்வதற்கு விரும்பும் அமெரிக்கா தனது ஆளுகைக்குள் அனைத்தையும் வைத்துக் கொள்ள விரும்புகின்றது. 

இலங்கையில் முஸ்லி;ம்கள் சிங்கள மன்னர்களை பாதுகாத்த வரலாறுகள் உண்டு. இலங்கை துறைமுகம் மரைக்காக்ர் என்பவரது இடமாகும். இலங்கையில் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் முன்னேறி வருகின்றார்கள் என்பதற்காக ஐரோப்பா இலங்கையில் புகுந்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தினை நாசப்படுத்த முனைந்துள்ளது.

இஸ்லாத்தையும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அழிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய உலகம் எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையலெ;லாம் செய்து வருகின்றது. இஸ்லாமிய தீவிரவாத குழுக்களை உருவாக்கி அதற்கு ஆயுதங்களை வழங்கி முஸ்லிம்களுக்குள்ளேயே முஸ்லிம்களை மோதவிட்டு முஸ்லிம்களாலேயே முஸ்லிம்களை அழிக்கின்ற பெரும் நாசகர வேலையினை இன்று  அமெரிக்காவும் ஐரோப்பாவும் மேற் கொண்டு வருகின்றது' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இந்த வகையில் இலங்கையில் நாம் மிக அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்ட நகர்வை நோக்கி நாம் சரியாக பயணிக்க வேண்டும். நமக்குள் தௌஹீத் என்றும், சுன்னத் வல் ஜமா அத் என்றும் அல்லது வேறு இஸ்லாமிய இயக்கம் என்றும் பிரிவினைகளை தோற்றுவித்து இயகத்துவ அடையாளத்தை ஏற்படுத்துவதற்காக நாம் நமது ஒற்றுமையை சீரழிக்கக் கூடாது.

இறைவனையும், இறைத்தூதரர் (ஸல்)அவர்களின் வழிகாட்டல்களையும் பின் பற்றி நாம் கலிமாவின் யெரால் ஒன்று பட வேண்டும். இயக்கத்துவ அடையாளத்திற்காக அல்லது இயக்கத்துவ கொள்கை வாதத்திற்கு ஆட் சேர்ப்பதற்காக நமது ஒற்றுமையை மலினப்படுத்தி முஸ்லிம் உம்மா எனும் ஒற்றுமையை பிரிக்கக் முற்படக் கூடாது.

இங்கு நமது முஸ்லிம் ஒற்றுமையை மலினப்படுத்தி சீர் குலைக்க கங்கனம் கட்டி செய்றபட்டு வருகின்றனர். இதை கருத்திற் கொண்டு நாம் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் பலப்படத்த வேண்டும்.

கலிமா என்ற பெயரால் அனைவரும் ஒன்று படவேண்டும். ஒற்றுமைக்கான ஐக்கியத்திற்கான வேலைத்திட்டத்தினை அனைவரும் மேற் கொள்ள வேண்டும் இந்த ஒறற்றுமைக்காகவே நான் இனிப்பிரச்சாரம் செய்வேன்.

இந்த ஐக்கியத்திற்காக ஒற்றுமைக்காக, உலமாக்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள் தமது பணியினை செய்ய வேண்டும். என்பதை புத்தி ஜீவிகள் உலமாக்கள் அறிஞர்கள் நிறைந்த இந்த காத்தான்குடியில் வைத்து நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என அமைச்சர் பசீர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X