2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2014 ஜூலை 11 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகப்பிரிவிலும் ஒரு பாடசாலையை மாதிரிப் பாடசாலையாகத் தெரிவுசெய்து அனைத்து வசதிகளும் உள்ள, கற்கை நிலையில் உயர்தரமுள்ள பாடசாலையாக மாற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் வியாழக்கிழமை(11) நடைபெற்ற மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு அரசாங்க அதிபரால் விடுக்கப்பட்டது.

மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம், வலயக்கல்விப் பணிப்பாளர்களான எஸ்.ஸ்ரீகிருஷ்ணராஜா, எஸ்.பாஸ்கரன், திருமதி ந.புள்ளைநாயகம் உள்ளிட்டோர் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பில் வெளிப்படையானதும் விரிவானதுமான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர்,

“மாவட்டத்தின் கல்வி நிலையில் மேம்பாட்டை ஏற்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தினை இலங்கையில் மாத்திரமல்ல உலகளவில் உயர்ந்ததொரு மட்டத்திற்கு முன்னேற்ற வேண்டுமாக இருந்தால் கல்வி சார்ந்து அனைத்துத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

அவ்வாறு செயற்படும் போது ஒவ்வொரு மாணவனையும் சிறந்த நற்பிரஜையாகவும் கல்வியாளனாகவும் மாற்றமுடியும்.

அதற்கான தேவைப்பாடுகளை செயற்திட்டங்களை ஒருங்கிணைந்த வகையில் மேற்கொள்வதற்காகவே இந்த கல்வி அபிவிருத்திக்கான விசேட கலந்துரையாடல் நடத்தப்படுகிறது” என்றார்.

இதன்போது பாடசாலைக்கல்வி, சிறுவர் பிரச்சினைகள், தனியார் கல்வி நிலையங்களால் ஏற்படும் பிரச்சினைகள், போசாக்கான உணவுகள் வழங்குதல் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இதன்போது பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், சிறுவர் அபிவிருத்தி தொடர்பான உத்தியோகத்தர்கள், பாடசாலைக்கல்வி சார்ந்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்கள், வைத்தியர்கள், சுகாதாரப் பரிசோதகர்கள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X