2025 டிசெம்பர் 25, வியாழக்கிழமை

அனர்த்தத்தை கையாள பொறிமுறை உருவாக்கம்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 01 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

அனர்த்தம் ஒன்று ஏற்படும்போது அதைக் கையாள்வது தொடர்பில்  இலங்கையில் இருக்கின்ற அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக  போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தெரிவித்தார்.

இவ்வாறான பொறிமுறையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பான நிகழ்வு இங்கு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.   

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அக்ரெட் அரசசார்பற்ற அமைப்புடனும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடத்திய அனர்த்த ஒத்திகை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை  மாலை பட்டாபுரம் கிராமத்தில்  இடம்பெற்றது. இதன்போது, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில்,

'இற்றைக்கு 10 வருடங்களுக்கு முதல் கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமியின் தாக்கத்தின் பின்னர்தான் அனர்த்த மத்திய நிலையம் செயற்படத் தொடங்கி, அனர்த்த முகாமைத்துவம் என்ற சொல்கூட எமது அரச அதிகாரிகளுக்கும் பரிட்சயமானது. அனர்த்த முன்னெச்சரிக்கை வழங்கும் செயற்பாடுகளும் சுனாமியின் பின்னர்தான் தீவிரம் பெற்றது. இதனால், அனர்த்தம் தொடர்பாக எமது இலங்கை மக்கள் விழிப்பூட்டப்பட்டுள்ளார்கள்.

இங்கு நடைபெற்ற அனர்த்த ஒத்திகையின்;போது மக்கள் எவ்வாறு பயிற்றப்பட்டுள்ளார்கள் என்பதை அவதானிக்க முடிகின்றது. இன்றைய செயற்பாடு காரணமாக எதிர்காலத்தில் இக்கிராமத்தில் வரும் அனர்த்தங்களின்போது இக்கிராம மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதில் நம்பிக்கை கொள்ள வைத்துள்ளது. மக்கள் இவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்கும் பட்சத்தில் அரச முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுவில் முன்னெடுத்துச் செல்லலாம்.  

அனர்த்தம் ஒன்றின்போது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அனர்த்த முக்காமைத்துவ அதிகாரிகளே பொறுப்புக் கூறக் கூடியவர்களாக இருப்பார்கள். மக்களுக்கு அனர்த்த எச்சரிக்கை செய்யும் உத்தியோகபூர்வ அதிகாரம் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கே இருக்கின்றது. அவர்கள் ஊடாகத்தான் தகவல்கள் எமக்கு வரும். ஆனால் வதந்தித் தகவல்களை மக்கள் நம்பக் கூடாது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு அதாவது தேடுதலும் மீட்பும் எனும் பொறுப்பு இலங்கை இராணுவத்தினரிடமும் கடற்படையினரிடமும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கபட்டுள்ளது. இடம்பெயரும் மக்களுக்கு உணவு வழங்கும் பொறுப்பு கிராம சேவரிடமும் குடிநீர் வழங்கும் பொறுப்பு பிரதேச சபையிடமும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகள் பொதுச்சுகாதாரப் பிரிவு, பிராந்திய சுகாதாரப் பிரிவு ஆகியன கண்காணிக்கும். உணவு அல்லாத ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதற்கு அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

எனவே, மக்களிடத்தில் எவ்வேளையிலும் அவசரகாலப் பொதி இருக்க வேண்டும். அதனுள் முக்கிய ஆணங்களை வைத்திருக்க வேண்டும். அனர்த்தம் வருவதற்குரிய எச்சரிக்கை கிடைக்கப் பெற்றதும் வீட்டிலுள்ள அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியேற முடியாது. அவசரகாலப் பொதியினை மாத்திரம் எடுத்துக்கொண்டுதான் வெளியயேற வேண்டும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X