2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

சமூக ஒற்றுமையை கொச்சைப்படுத்த வேண்டாம்: முபீன்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமூக ஒற்றுமையை கொச்சைப்படுத்த வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன்  தெரிவித்தார். 

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து போட்டியிடுவது அரசாங்கத்தின் சதி என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை (11) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நீண்டகாலமாக முஸ்லிம் மக்கள், முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று ஓரணியில் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர். ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற செய்தி வெளியானது முதல் கள நிலைமைகளை ஆராய்வதற்காக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்; ஹக்கீம் தலைமையிலான குழுவினர் பல தடவைகள் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று முஸ்லிம் மக்களை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்புக்களில் முஸ்லிம் கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாகச் செயற்பட்டால் மாத்திரமே தமக்கான முஸ்லிம் பிரதிநிதியை பெற்;றுக்கொள்ள முடியும் என்று மக்களால் வலியுறுத்தப்பட்டதுடன், இந்த ஒற்றுமையை ஏற்படுத்தும் பணியை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரே மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினர்.

இது தொடர்பாக பல்வேறு முயற்சிகளையும் சந்திப்புக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மலையக முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்ட முக்கிய அமைப்புகளுடன் சந்திப்புத் தொடர்ந்தது.

அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸுக்கான குறிப்பிடத்தக்க ஆதரவு ஊவாவில் காணப்படாததால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஊவா மாகாண முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய மூன்றும் இணைந்து போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கூறுவது போல் இது கொந்துராத்தோ, வாக்கு கொள்ளையோ அல்ல. மாறாக ஊவா முஸ்லிம்களின் அரசியல் உரிமையும் இருப்பையும் தக்க வைப்பதற்கான முயற்சியும் முஸ்லிம் அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான  ஆரம்பப் புள்ளி என்பதையும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் விளங்கிக்கொள்ள வேண்டும். முதலில் ஐக்கிய தேசியக் கட்சி உள்வீட்டுப் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள வேண்டும். அதன் பின்பே பிற கட்சிகளை பற்றிப் பேசுவதற்கான தகுதி அதற்கு கிடைக்கும்.

பெண்டாட்டியில் கோபத்தை வைத்துக்கொண்டு பிள்ளையில் சீறும் வக்கற்ற தந்தை போல் ஐக்கிய தேசியக் கட்சி நடக்கக்கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உங்கள் கட்சி நடக்க முடியாமல் நக்கரித்தபோது ஊன்று கோலாய் உதவி உங்களை தட்டியெழுப்பி உயிரூட்டி கிழக்கில் பனிரெண்டு ஆசனங்களுடன் உங்களை அரியணையில் அமர்த்தி அழகு பார்த்தது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறந்து விடாதீர்கள்.
உங்களோடு நாங்கள் வந்தால் தங்கம், வராவிட்டால் தகரம் என்ற நிலைப்பாட்டை விட்டு விடுங்கள்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X