2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இறால் பண்ணையாளர்களுக்கு கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மற்றும் கல்முனை பிரதேச இறால் பண்ணையாளர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கிரான்குளம் சீ மூன் கார்டன் விடுதி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இறால் உற்பத்தியை சர்வதேச தரத்துக்கு  பன்மடங்காக்குவதற்காக   பண்ணை இறால் வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை கையாளுதல், இறால் பண்ணையாளர்கள் கொத்தணி அமைப்புக்களை ஏற்படுத்தி பரஸ்பர தொழில்நுட்ப அறிவுகளை பகிருதல்,  கொத்தணி அமைப்புக்கள் இணைந்து உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைப்படுத்தல் வசதிகளுக்காக கம்பனிகளை அமைத்தல் போன்ற நோக்கங்களின் அடிப்படையில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதிலும் உள்ளூர் வளங்களை உயர்ந்த மட்டத்தில் பயன்படுத்தி இந்த மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதில் இரவு, பகலாக அக்கறை எடுத்து வருவதாக அமைச்சின் செயலாளர் கே.பத்மநாதன் தெரிவித்தார்.

மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் பதவிக் காலத்தில் உள்ளூர் உற்பத்தியும் பொருளாதாரமும் தன்னிறைவு காண வேண்டும் என்ற கனவை அவர் நனவாக்குவதற்கு பாடுபடுகின்றார். எனவே அவரது அமைச்சின் கீழ் வரும் விவசாய கால்நடை உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான காலமாகும்' எனவும் அவர் கூறினார்.
குறுகிய கால குறைந்த முதலீட்டில் அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் இறால் பண்ணை விவசாயம் வீட்டினதும் நாட்டினதும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் நல்ல பங்களிப்பைச் செய்ய முடியும் எனவும்  அவர் கூறினார்.

கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மத்திய வங்கியின் மாகாண முகாமையாளர் டபிள்யூ.தர்மகீர்த்தி, கிங் நன்னீர் மீன் இன சேவை நிலைய பணிப்பாளர் டாக்டர் எஸ்.தயாபரன், மாவட்ட சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் எஸ்.கோகிலன், மாவட்ட நீரியல் உயிரியலாளர் எஸ்.ரவிக்குமார், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வங்கி முகாமையாளர்கள், இறால் பண்ணையாளர்கள், மலேசியா மற்றும் தாய்லாந்து கோல்ட் கொயின் நிலையத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X