2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைப் பொருளுக்கெதிராக அணிதிரளுமாறு அழைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

போதைப் பொருள் பாவினைக்கு எதிரான அனைத்து வித செயற்பாடுகளுக்கும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் முக்கியத்துவம் வழங்கியுள்ளதாக சம்மேளத்தின் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சம்மேளனத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனிதனுடைய சுய புத்தியை மழுங்கடிக்கக் கூடிய அனைத்து விதமான போதைப் பொருட்களிலிருந்தும் விலகியிருக்குமாறு இஸ்லாம் கண்டித்து உணர்த்துகின்றது.

மனித உடலுக்கும் உள்ளத்துக்கும் தீங்கிழைக்கக் கூடிய எல்லா விதமான போதைப் பொருட்களையும் இஸ்லாம் தடைசெய்துள்ளது.

ஹெரோய்ன் போன்ற மிகவும் கொடிய போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் மூலமாக கொலை, களவு, மோசடி, விபசாரம் போன்ற பாதகச் செயல்களைச் செய்வதற்கும் சமூகச் சீரழிவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.

சகல விதமான குற்றச் செயல்களினதும் தோற்றுவாயாகவுள்ள இத்தகைய போதைப் பொருள் பாவினையிலிருந்து இளஞ் சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும்.
பாரிய சமூகச் சீரழிவுகளுக்கு இட்டுச் செல்லும் இத்தகைய குற்றச் செயல்களை செய்யவிடாமலும் போதைக்கு அடிமையாகாமலும் இளைஞர் சமூகத்தைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

எதிர்பார்ப்பு மிக்க இளஞ்சமுதாயத்தினரின்  வாழ்க்கை, போதைப் பொருள் பாவினையின் மூலமாக வீணடிக்கப்பட்டு சூனியமாக்கப்படுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

அத்தகைய ஒரு நிலைமை வரும்வரை நாம் காத்திருக்கவும் முடியாது. இத்தகைய செல்களை நாம் முளையிலேயே கிள்ளியெறிந்து விட வேண்டும்.

ஊரில் உள்ள மிகவும் பொறுப்பு மிக்க அமைப்பான பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திலுள்ள மார்க்க அறிஞர்கள், ஊர்ப் பிரமுகர்கள், கல்விமான்கள் ஏனைய சமூக ஆர்வலர்கள்  என எல்லோருமாக இணைந்து இத்தகைய போதைப் பொருள் ஒழிப்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனத் தீர்மானித்துள்ளோம்.

குற்றச் செயல்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்த சம்மேளனத்தின் மீதும் ஊரின் அரசியல் தலைமைத்துவங்களின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தப் பணியை இந்த இரு சாராரும் சரியாகச் செய்யாவிட்டால் நாங்கள் சமூகத்திற்கு மட்டுமல்ல, இறைவனிடமும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X