2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலை வாய்ப்புக்களில் முறையற்ற இனத்துவம் பேணப்படுகின்றது: ரீ.எம்.வி.பி

Gavitha   / 2014 ஓகஸ்ட் 17 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கிழக்கு மாகாண சபையின் வேலை வாய்ப்புக்களில் முறையற்ற இனத்துவம் பேணப்பட்டு வருவதாக முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கட்சியான ரீ.எம்.வி.பி. குற்றச் சாட்டொன்றை முன் வைத்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரீ.எம்.வி.பி) தொழிற் சங்கக் கூட்டம் சனிக்கிழமை (16) கட்சியின் தலைமை மட்டக்களப்பிலுள்ள செயலகத்தில் தொழிற்சங்கத் தலைவர் ஏ. பகீரதன் தலைமையில் இடம் பெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபையினூடாக வழங்கப்படும் வேலை வாய்ப்புக்களில் முறையற்ற இனத்துவம் பேணப்பட்டு வருவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ரீ.எம்.வி.பி கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பி. பிரசாந்தன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் 42 சதவீதமாக தமிழர்களும், 38 சதவீதமாக முஸ்லிம்களும், 20 சதவீதமாக  சிங்களவர்களும் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டு வரும் நிலையில், வழங்கப்படும் சிற்றூழியர் வேலை தொடக்கம் முகாமைத்துவ உதவியாளர்கள் வேலை வரையில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு விகிதாசார அடிப்படையில் மிகமிகக் குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புக்கள் அற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு  தகுதியானவர்கள் மென்மேலும் ஒதுக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

முற்றுமுழுவதுமாக தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அல்லது சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதினால் அந்நியோன்னியமாக வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் மத்தியில் இனக் குரோதம் ஏற்பட சந்தர்ப்பம் உள்ளது.
இது கிழக்கு மாகாணசபையின் வெறுப்புணர்ச்சியினை தூண்டும் செயலாகவும் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபையின் இந்த பாரபட்ச நிருவாக முறைமை தடுக்கப்பட்டு மாகாண இன விகிதாசாரம் பேணப்பட வேண்டும். இல்லையாயின் எமது  தொழிற்சங்கம் வீதியில் இறங்கி போராடத் தயாராக உள்ளது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தொழிற் சங்கத்தலைவர் ஏ. பகீரதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ரீ.எம்.வி.பி. யின் தேசிய அமைப்பாளர் பி. தவேந்திரராஜா, பிரதித் தலைவர் கே. யோகவேல் உள்ளிட்ட கட்சியின் பிரமுகர்களும் அதன் தொழிற் சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X