2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழனோ, முஸ்லிமோ ஜனாதிபதியாக வரமுடியாது: விநாயகமூர்த்தி முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

'18 சதவீதம் தமிழ் பேசுகின்ற சமூகம் உள்ள இந்த நாட்டில் தமிழனோ அல்லது முஸ்லிமோ ஒருநாளும் ஜனாதிபதியாக வரமுடியாது. இந்த நிலையில்,  தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு எமது மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆனால், தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, வாக்களித்து எமது மக்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள்.'  என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுமுந்தன்வெளி கிராமத்தின் பொதுவிளையாட்டு மைதான புனரமைப்புக்கான அடிக்கல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) நாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'சரத் பொன்சேகாவை பற்றி எனக்குத்தான் நன்கு தெரியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தெரியாது. சரத் பொன்சேகா ஜனாதிபதியாக வந்திருந்தால், தமிழ் மக்களை ஆட்டிப் படைத்திருப்பார்.  சரத் பொன்சேகாவை நான் சந்தித்தபோது கடந்த யுத்த காலத்தில் என்னால் அவர் தாக்கப்பட்ட தழும்புகளை என்னிடம் காட்டினார்.

எமது பிள்ளைகளை பலி கொடுத்து, சாகடித்து என்ன பிரயோசம் கிடைத்தது. அதன் வலியும் வேதனைகளும் எனக்கு நன்கு தெரியும். ஏனெனில் எனது அண்ணனையும் போராட்டத்தில் இழந்துள்ளேன். எனது இணைப்பாளர் பொன்.ரவீந்திரனும் அவரது அண்ணனையும் இழந்துள்ளார். வீட்டுக்கு வீடு எமது தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளார்கள்.

இப்போது எமது மக்கள் சந்தோசமாக வாழ்கின்றார்கள். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதால் எமது சமூகம் தற்போது பாரிய முன்னேற்றம் அடைந்து வருகின்றது. நவீன நாகரிகமுள்ள சமூகமாக மற்றமடைந்து வருகின்றது.

வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள 43 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 4 கோடியே 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. களுமுந்தன்வெளி கிராமத்துக்கு ஒரு பொதுக்கட்டடமும் இந்த விளையாட்டு மைதானமும் என இவ்வாறான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமைத்துக் கொடுக்கப்படும்.

இந்தக் கிராம மக்கள் உணர்வு படைத்த மக்கள். கடந்த போராட்ட காலத்தில் குடும்பம், குடும்பமாக தங்களது பிள்ளைகளை போராட்டத்துக்கு கொடுத்தவர்கள். இதை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். எத்தனையோ பெண் போராளிகளையும் பல உயரிழப்புக்களையும்; சந்தித்தவர்களே இந்தக் கிராமத்தவர்கள். முன்னாள் பெண் போராளிகள் இன்னமும் பல கஷ்டங்களை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவற்றுக்காக வேண்டியே  நான் பல அபிவிருத்திகளை முன்னின்று செய்து வருகின்றேன். தற்போது 90 சதவீதம் மின்சாரத் தேவை பூர்தியாக்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம் அமுல்படுத்தப்பட்டுளளது.

இதற்காக வேண்டி நாடாளுமன்றத்துக்குச் சென்று வீணாக 5 வருடங்களை கடத்தவேண்டிய அவசியமில்லை. அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்துக்கு  வந்து சாப்பிட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டுச் செல்கின்றார்கள்.

பல மில்லியன் ரூபாய் செலவில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நகர்ப் பகுதியில் உள்ள மக்களைப் போன்று படுவான்கரை மக்களையும் வளப்படுத்தவேண்டும் என்பதே எனது நோக்கமாகும். படுவான்கரை மக்கள் காரில் சென்று வேளாண்மைச் செய்யுமளவுக்கு வீதிகளுக்கு கார்ப்பட் போடப்பட்டு வருகின்றன.

படுவான்கரையில் அமைந்துள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு ஆகிய மூன்று பிரதேச மக்களும் ஒன்றிணைந்தால், ஒரு தரமான அமைச்சரை உருவாக்கலாம். கிழக்கில் நான் மட்டுமே ஒரேயொரு தமிழ் அமைச்சராக இருந்து செயற்பட்டு வருகின்றேன். என்னைப் போன்று இன்னும் 2 அமைச்சர்கள் இருந்தால் எவ்வளவோ பல அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம். எனவே, எமது மக்கள் தேர்தல் காலத்தில் பலத்தைக்; காட்ட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் வந்தால் தற்போதிருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷதான் வெற்றி பெறுவார். தற்போது நடைபெறப் போகின்ற ஊவா மாகாணசபைத் தேர்தலில் பாரிய வெற்றி அரசாங்கத்துக்கு  கிடைக்கும். இதில் எதுவித மாற்றமும் இல்லை. அந்தளவுக்கு  அரசாங்கம் மக்களுக்காக வேலை செய்து வருகின்றது. ஆனாலும், எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வளவு அபிவிருத்திகளைச் செய்தாலும் மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களிப்பதில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்கள் இருக்கின்றன. எமது சகோதர முஸ்லம் இன மக்களைப் பிரதிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமே   இலங்கையில் முதலாவது இடத்தை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதை எமது மக்களால் ஏன் செய்ய முடியாது. பின்நோக்கிய  நிலையில் எமது சமூகம் செல்லக்கூடாது. எதிர்காலத்தில் கல்வியில் வீறுநடை போட வேண்டும். இவற்றுக்காக நான் அதிக முயற்சி எடுத்து வருகின்றேன். 

கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்ததினால் தமிழர்களின் கையிலிருந்த கிழக்கு மாகாணசபை பறிபோயுள்ளது.  ஆனாலும், தற்போதிருக்கின்ற கிழக்கு மாகாண அமைச்சர்களை எமது மக்கள் சந்திக்கச் செல்வதுமில்லை. அவர்கள் யார் என்றும் எமது மக்களுக்குத் தெரியாது.  இதுவே இன்றைய நிலைமை. 75 சதவீதம் இருக்கின்ற எமது தமிழ் மக்களால் ஒரு முதலமைச்சரை  உருவாக்க முடியாமல் போய்விட்டது. ஆனால், 25 சதவீதமாக இருக்கின்ற முஸ்லிம் மக்கள் அவர்களது புத்தியை பாவித்து வென்றுள்ளார்கள். இதற்காகத்தான் எமது சமூகம் தேர்தல் காலத்தில் பலத்தைக்; காட்ட வேண்டும்.

இவ்வாறு எமது சமூகம் தொடர்ந்து தவறு விட்டுக் கொண்டு சென்றால் அதிகாரிகள் மத்தியிலும் மாற்றங்கள் வரலாம.; எனவே எமது சமூகம் விழிப்படைய வேண்டும். 

நான் 6 வருடங்கள் நாடாளுமன்றத்தில் இருந்திருக்கின்றேன். மின்சாரம், வீதி அபிவிருத்தி, குடிநீர் வசதி ஆகியவற்றை  நான் தற்போது நிறைவேற்றி வருகின்றேன். இவை எனது கற்பனையாகத்தான் இருந்து வந்தது. ஆனால், அவை நிறைவேறி வருகின்றன. யுத்தத்தினாலும் வீட்டு, வேலைகளினாலும் அதிக பாதிப்பு பெண்களுக்குத்தான். இதைப் போக்க வேண்டும் என்பதற்காக செயற்பட்டு வருகின்றேன்.

மத்திய அரசாங்கத்திலிருந்துதான் நான் அபிவிருத்திகளைச் செய்து வருகின்றேன் ஆனால் மாகாண அரசிலிருந்து எதுவித உதவிகளும் எமது மக்களுக்கு இல்லாமல் இருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து மதுபாவனைக்காக மாத்திரம் மாதாந்தம் 20 கோடி ரூபா செலவாகின்றது. இலங்கையில் மதுபானம் அதிகம் விற்பனை செய்யப்படும் இடமாக மட்டக்களப்பு மாவட்டம் மாறியுள்ளது. இம்மாவட்டத்தில் இருக்கின்ற மது விற்பனை நிலையங்களையும் குறைப்பதற்கு ஆலோசித்து வருகின்றோம்' என்றார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X