2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

குருக்கள் மடம் புதைகுழியை தோண்டும் நடவடிக்கை மீண்டும் ஒத்திவைப்பு

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு, குருக்கள் மடம் புதை குழி தோண்டும் நடவடிக்கை நவம்பர் மாதம் 24 திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதைகுழியை இன்று 18 ஆம் திகதி தோண்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ், ஜூலை 01 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை வருகைதரவில்லை என்று களுவாஞ்சிகுடி பொலிஸார், நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்தே நீதவான், புதைகுழி தோண்டும் நடவடிக்கையை நவம்பர் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

1990 ஆம் ஆண்டு காத்தான்குடியைச் சேர்ந்த சிலர் குருக்கள் மடம் பிரதேசத்தில் வைத்து கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடத்தை ஜூலை மாதம் 1 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை தோண்டுவதற்குரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ், ஜூன் 23 ஆம் திகதி களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

எனினும், புதைகுழியை தோண்டுவதற்குரிய ஏற்பாடுகள் இல்லாததாலும் சட்டவைத்திய நிபுணர் கொழும்பிலிருந்து உரிய இடத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என்பதாலும் தோண்டுவற்குரிய உபகரணங்கள் மற்றும் ஆட்கள் ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளதால் அதற்கு கால அவகாசம் தருமாறு கோரி களுவாஞ்சிகுடி பொலிஸார் நீதிமன்றத்தில் ஜூலை மாதம் 1 ஆம் திகதி  அறிக்கையொன்றை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையை ஆராய்ந்த நீதிபதி ஏ.எம்.றியாழ் ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதியன்று உரிய புதைகுழியை தோண்டு வதற்கு நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அன்று உத்தரவிட்டிருந்தார்.

இதன்போது களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் புதை குழியை தோண்டுமாறு முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளரான காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஏ. மஜீத் ஆகியோர் நீதிமன்றில் அன்று சமூகமளித்திருந்தனர்.

1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி அன்று காத்தான்குடியைச் சேர்ந்த 165 பேர் கல்முனையிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு குருக்கள் மடம் பகுதியில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு குருக்கள் மடம் பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் புதைகுழியை தோண்டி இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்தவற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மகஜர் ஒன்றை வழங்கி ஆணைக்குழுவிடம் கேட்டிருந்தார்.

அதனடிப்படையில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு இது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியிருந்தது.

இந் நிலையில் இதில் தனது உறவினர் ஒருவர் கடத்தப்பட்டதாகவும் அவர் குருக்கள் மடம் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாகவும் அதை தோண்டுமாறும் கூறி காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றஊப் ஏ மஜீத் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.

அத்தோடு உரிய புதைகுழி இடத்தினையும் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அடையாளம் காட்டியமை குறிப்பிடத்தக்கது. அந்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார், நீதிமன்றுக்கு அறிவித்ததையடுத்தே புதைகுழியை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X