2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்களுக்கு உதவ நாம் தயார் : சிப்லி பாறுக்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


குருக்கள்மடம் சம்பவத்தை போன்று, கடந்த காலங்களில் முஸ்லிம்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, புதைக்கப்பட்ட சம்பவங்கள் இருந்தால், அதனை யாராவது வெளிக்கொண்டுவந்தால் அவர்களுக்கு பாராபட்சமற்ற முறையில் உதவி செய்ய நாம் தயாராகவுள்ளோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, குருக்கள்மடம் புதைகுழியை தோண்டுவதற்கு இன்று திங்கட்கிழமை (18) கொழும்பிலிருந்து வருகைதரவிருந்த சட்ட வைத்திய நிபுணர் வருகை தராததையடுத்து, சடலங்களை தோண்டுவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது அந்த இடத்திற்கு வருகை தந்திருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனத்துக்கு அப்பால் மனிதன் என்ற ரீதியிலும், அவனது சமய சம்பிரதாய ரீதியிலும், அவனது இறந்த உடல்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு மாறாக செயற்படுவது பொருத்தமில்லாத ஒரு விடயமாகும்.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் மக்கள் கல்முனையிலிருந்து காத்தான்குடிக்கு செல்லும் போது கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாக கடந்த வருடம் (2013) நவம்பர் மாதத்திலிருந்து தகவல்களைச் சேகரித்து அதனை தோண்டுவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்.

இதற்குரிய காரணம் என்னவெனில், முஸ்லிம்களும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியினை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டியுள்ளது. 

இந்த நாட்டின் தற்போதைய நிலையில் முஸ்லிம்கள் யுத்தத்தினால் பாதிக்கப்படவில்லை. வடகிழக்கில் உள்ள முஸ்லிம் மக்கள் எந்தவித யுத்த பாதிப்புக்களுமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற ஓர் எண்ணப்பாடு, எல்லா இன மக்களிடத்திலும் இருந்து கொண்டு வருகின்றது.

ஆனால் உண்மையில் முஸ்லிம்களும் கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்பதனை சர்வதேசத்திற்கு, எடுத்துக் காட்டவேண்டும் ஆனாலும் சர்வதேச ரீதியில் கூட முஸ்லிம்களைப் பற்றிக் கதைப்பது குறைவாக இருக்கின்றது. வடகிழக்கிலே உள்ள தமிழ் மக்களைப் பற்றிப் பேசுகின்ற சர்வதேச சமூகம் முஸ்லிம் மக்களையும் பற்றிப் பேச வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

இலங்கையிலே சிறுபான்மையாக தமிழ், முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதேவேளை, வடக்கு கிழக்கில் தான் தமிழ், முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  வடகிழக்கிலே உள்ள மக்களுக்கு ஏதாவது ஓர் தீர்வுத்திட்டம் கொடுக்கப்படுகின்ற போது, அதில் முஸ்லிம்களின் அபிலாஷைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.

குருக்கள்மடம் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள உங்களது உறவுகளின் உடல்களை மதசடங்கு முறைகளுக்கு ஏற்றவாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இவற்றுக்கு நாம் உதவுவோம் என்றும் தமிழ் சகோதரர்கள்தான்  இந்த இடத்தினையும் எங்களுக்கு அடையாளம் காட்டித்தந்தார்கள்.

நிச்சயமாக இது தொடர்பாக யாரையும் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு கிடையாது. ஒரு சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி வெளிக்கொண்டுவரப்பட வேண்டுமே தவிர, தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் எமக்கு இல்லை என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X