2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சர்வோதயத்தின் ஐந்தாட்டு செயற்றிட்டத்தை மேற்கொள்ள தொண்டர் செயலணிகளுக்குப் பயிற்சி

Thipaan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


சர்வோதய இயக்கத்தின் புதிய ஐந்தாட்டு செயற் திட்டத்தை மேற்கொள்ள தொண்டர் செயலணிகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டு வருதாக சர்வோதய- சாந்திசேனா அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர கந்தகே இன்று சனிக்கிழமை (23) தெரிவித்தார்.

2014 தொடக்கம் 2018 வரைக்குமான செயற்திட்டத் தயாரிப்புக்காக இந்தப் பயிற்சிநெறி வழங்கப்படுகின்றது.

சர்வோதயத்தின் ஐந்தாண்டுத் திட்டத்துக்;காக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண செயலணிக்கான பயிற்சி நெறி இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் ஆரம்பமானது.

சர்வோதய இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தலைமையில் இன்று 23.08.2014 சனிக்கிழமை ஆரம்பமான இருநாள் பயிற்சி நெறியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 46 பேர் கலந்து கொண்டனர்.

பயிற்சி நெறியை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சர்வோதய-சாந்திசேனா அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர கந்தகே,
எந்த மதங்களைப் பின்னணியாகக் கொண்டவர்களாக இருந்தாலும் மனிதர்களுக்கிடையில் வக்கிர உணர்வு ஏற்படுவதற்கு அவர்களது தனிப்பட்ட மனிதர்களிடம் உள்ள தீய குணங்களே காரணமாக அமைந்து விடுகின்றன.

அடுத்தவரின் உணர்வுகள் மதிக்கப்படாததால் வன்முறைகள் இடம்பெறுகின்றன. பலர் சினிமாவில் வருகின்ற வன்முறைக் காட்சிகளிலிருந்து கற்றுக் கொண்டு நடைமுறையில் அவற்றைப் பிரயோகிக்க முற்பட்டு விடுகின்றார்கள்.

வன்முறையில் ஈடுபடும் தீய குணமுள்ளவர்கள் கடைசியில் தத்தமது மத அடையாளங்களுக்குள் புகுந்து கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்கின்றார்கள்.

உண்மையில் எந்த மதமும் வன்முறைகளைப் போதிப்பதில்லை. அவை அடுத்தவருக்குத் தொண்டு செய்வதையே வலியுறுத்தி நிற்கின்றன.

எனவே, சர்வோதயமும் தொண்டு செய்வதை அடிப்படையாகக் கொண்டே கடந்த 55 வருடங்களாக இலங்கையில் சேவை செய்து நிலைத்து நிற்கிறது. சர்வோதய இயக்கத்திற்கு இன மத மொழி வேறுபாடுகள் இல்லை என்றார்.

சர்வோதய சாந்திசேனா அமைப்பின் உதவிப் பணிப்பாளர் ரசிக கீதனகே, சர்வோதய இயக்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வி. ஜீவராஜ், மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ். மதனகுமார், அம்பாறை மாவட்ட இணைப்பாளர் அனுருத்த அபேரத்ன ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

இனங்களுக்கிடையிலான ஐக்கியமும் சகவாழ்வும், தன்னார்வ தொண்டு வேலைத் திட்டம், நடைமுறை சமூகப் பின்னணி, தொண்டர்களின் கடமைகள், சமூகத் தலைவர்களின் கடமைப் பொறுப்புக்கள், ஐந்தாண்டு மாதிரித் திட்டம் போன்ற தலைப்புக்களில் பயிற்சி நெறிகள் இடம்பெறுகின்றன என்று சர்வோதய- சாந்திசேனா அமைப்பின் பணிப்பாளர் ரவீந்திர கந்தகே தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X