2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பயங்கரவாதிகளுக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் தொடர்புள்ளதாக கூறுவது மடமைத்தனம்: ஹக்கீம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கும் இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கும் இடையே தொடர்புள்ளதாக தெரிவிப்பது சுத்த மடமையிலும் மடமைத்தனமான ஒரு கூற்றாகும். இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை (23) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒன்று கூடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை முஸ்லிம்களுக்கு உலக இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்பதை அவதானித்து வருகின்றோம் என றொஹான் குணரட்ன கூறியுள்ளார்.

  இவரின் கூற்று பிழையானது இப்படித்தான் இவர் எற்கெனவே கூறினார். அப்போதே இவரின் இந்தக் கூற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கண்டித்தது.

இவர் அல்கைதாவையும் ஆராய்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான அறிக்கைகள் விடுவது சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

'2040இல் சிங்களவர்கள் சிறுபான்மையாவார்களாம்' என்று ஒரு பல்கலைக்கழக நண்பர் என்னிடம் தெரிவித்தார். ஏன் இவ்வாறான நச்சுக்கருத்துக்களை உண்டாக்குகின்றீர்கள்.

அதே போன்றுதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் தடை செய்ய வேண்டுமென இவர் கூறியுள்ளார். இவரின் மடத்தனமான கூற்றை நாம் நிராகரிக்கின்றோம்.

இலங்கையின் இறமையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் பாதுகாக்கின்றது. இலங்கையின் இறமைக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் செயற்படவில்லை.

இலங்கையை முஸ்லிம் காங்கிரஸ் காட்டிக் கொடுத்து செயற்படவில்லை. தழிழ்த் தேசியக்கூட்டமைப்பு உள்ளது போல முஸ்லிம்களுக்கும் கட்சித் தேவை பலராலும் உணரப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் சேர்ந்த ஒரு அமைப்பாகும். அன்று தமிழீழ விடுதலைப்புலிகளினால் இந்த தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உருவாக்கப்பட்டது.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கலைத்து விட சிலர் முற்பட்ட போதிலும் தமிழ் புத்தி ஜீவிகளும் இந்து மகா சபைகளும் அதற்கு இடம்கொடுக்கவில்லை. இன்று தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுகின்றது.

அதன் ஒரு பரீட்சாத்தமாகவே ஊவா மாகாண சபையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுகின்றோம்.

அனைவரையும் ஒன்று படுத்துவத்றகான முதற் கட்டபலப்பரீட்சையாக நாம் பார்க்கின்றோம். இதன் மூலம் சிறந்த பெறுபேறு கிடைக்கும் எனவும் எதிர் பார்க்கின்றோம். முஸ்லிம் அரசியல் வாதிகள் ஒன்று பட்டால் பேரம் பேசும் சக்தியை நாம் உருவாக்கி கொள்ள முடியும்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தற்போது இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைத்து பேசுகின்றார் என்றால் ஏன், நாம் அவ்வாறான சக்தியாக மாறமுடியாது.

கட்சியை காட்டிக்கொடுக்கின்ற சுயலாபத்திற்காக செயல்படுபவர்களுக்கு இங்கு இடம் தரமுடியாது என்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்

கட்சியை பாதுகாத்து தன்னையும் பாதுகாத்து தூய்மையாக இணைந்து கொள்பவர்களுக்கே இந்தக் கட்சியில் இடமுண்டு. அத்துடன் பிரதேசவாதம் இன்று தலை தூக்கியுள்ளது. ஊருக்கு ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக மாகாணசபை உறுப்பினராக வர வேண்டும் என்கின்றனர்.

அவ்வாறான நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் நாடுபூராக ஒட்டுமொத்த சக்தியாக முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கியை காட்டவேண்டும் இது தான் இப்போதுள்ள தேவையாகும்.

அடுத்த கட்ட அரசியலுக்கு நாம் ஒன்றிணைந்த சமூகமாக முகம் கொடுக்க வேண்டும்.தற்போதுள்ள நிலைப்பாட்டில்  பாதுகாப்பினை அரசாங்கம் தான் தரவேண்டும் அரசாங்கத்திடம் மாத்திரமே இதனைப் பெற்றுக்கொள்ள முடியும்

ஒரு பிரச்சினை வரும்போது அமைச்சர் அதாவுல்லாஹ் அல்லது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கதைக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கதைக்கவேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அபிவிருத்தியையும் செய்து உரிமை பற்றியும் பேச வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர் அவற்றைத் தான் செய்து  வருகின்றோம்.

யாருக்கும் பயந்து எமது கருத்துக்களை கூறாமல் இருந்து விட முடியாது. காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்தவப்படுத்;தும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யூ.எல். எம்.என். முபீன் முன்னாள் நகர சபை தலைவர் மர்சூக் அகமட் லெவ்வை நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா, மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் றமழான் உட்பட பலரின் சேவைகளை நான் பாராட்டுகின்றேன். முன்னாள் மாகாண சபை உறுப்பினர் முபீன் ஒரு 'லட்சியப்போராளி' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பீர் சேகுதாவூத் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாறூக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ எம் மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான டிம்.தவம், ஆர்.எம்.அன்வர், எம்.லாஹீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.அன்ஸில், நிந்தவூர் தவிசாளர், எம்.அஸ்ரிப் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X