2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

த.தே.கூட்டமைப்புக்குள் பிளவு உண்டாக்க முயற்சி: அரியநேத்திரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குள் பிளவுகளை ஏற்படுத்தியது போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பிளவை உண்டாக்க அரசாங்கம் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புத் தொகுதி கட்சிக் கிளையின் புனரமைப்புக் கூட்டம் மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம்  சனிக்கிழமை (23)  நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்த முடியாது என்று உறுதியாகத் தெரிவதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சியை பிரிப்பதற்கு அரசு தனது வியூகத்தை வகுத்து வருகின்றது. அதில் முன்னின்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் ஆனந்தசங்கரி ஐயா.

வட, கிழக்கில் கடந்த காலத்தில் செயற்பட்ட தமிழ் இயக்கங்கள் காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக வேறு பாதையில் சென்றன.

இறுதியாக புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ், டெலோ போன்ற இயக்கங்கள் போராடினாலும் கூட 86ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு விடுதலை இயக்கம் மாத்திரம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி வரையும் போராடிக்கொண்டிருந்தது.

அந்த வகையில், அவ்வியக்கம் வட, கிழக்கு மக்களுக்காக தனித்துவமாக விடுதலைப் போராட்டம் நடத்தியதை வட, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் தமது ஏக பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டார்கள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

இவ்வாறானதொரு போராட்டம் வளர்ச்சியடைந்ததன் காரணமாகத்தான் 2001 பெப்ரவரி மாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
மட்டக்களப்பு கிழக்கி;லங்கை செய்தியாளர் சங்கமும் சில ஆர்வலர்களும் எடுத்துக்கொண்ட அயராத முயற்சியாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இதன் பின்னரே 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரும் அப்போது இருந்த ரணி;ல் விக்கிரமசிங்ஹவின் அரசாங்கமும் ஒரு ஒப்பந்தத்தை  மேற்கொண்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலாவது தேர்தலில் போட்டியிட்ட சின்னம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம்.
இதில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். அப்போது எமது கட்சியில் ஆனந்த சங்கரி ஐயா  இருந்தார். அப்போது விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் மேற்கொண்டபோது அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆனந்தசங்கரி ஐயா விலகிச் சென்றார்.

பின் 2004ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டாவது தேர்தலை சந்தித்தபோது, ஆனந்தசங்கரி ஐயா  அமைப்பின் சின்னத்தை தரமுடியாது என மறுத்தார்.

அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட்டதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய சின்னமாகிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னமாகும்.

இந்தத் தேர்தல் இடம்பெற்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்ட ரீதியற்ற அமைப்பு என ஆனந்தசங்கரி ஐயா வழக்குத் தாக்கல் செய்து, அதில் நாம் வெற்றி பெற்று தேர்தலிலும் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினோம்.

ஆனால், நாம் முழுநேர அரசியலை மேற்கொள்ளவில்லை. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனித்துவிட்டது என அரசாங்கம் அறிவித்தது.

அதன் பின் மீண்டும் 2010ஆம் ஆண்டு மூன்றாவது தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலிலும் நாங்கள் வீட்டுச் சின்னத்தில் போட்;டியிட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  பிரிப்பதற்காக பலர் முயற்சி செய்தார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்துவதற்காக பலர் தமிழர்களாக இருந்தும் எமக்கு எதிராக பல முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
இலங்கை அரசாங்கம் தாங்கள் வெற்றியீட்டியதாகவும் தமிழர்களின் போராட்டத்தை அழித்து விட்டதாகவும் இனி தமிழர்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை என நாடாளுமன்றத்திலே பகிரங்கமாக உரையாற்றினர்.

இந்த விடயங்களின் அடிப்படையில் இவற்றை நான் ஏன் கூறுகின்றேன் என்றால், தமிழீழ விடுதலைப்புலிகள் இருக்கின்றபோது உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவ்வமைப்பு அழிக்கப்பட்டது என கூறப்பட்ட பின்பும் வட, கிழக்கில் இருக்கும் எமது மக்கள் வட, கிழக்குக்கான  அரசியல் பலம் தேவை என்ற அடிப்படையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தார்கள்.

அதில் அம்பாறையைச் சேர்ந்த பியசேனா எம்.பி. மட்டும் அரசாங்கத்தால் இழுத்தெடுக்கப்பட்டார். ஏனைய 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களுக்குள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக இருக்கின்றோம்.

இந்த புளொட் அமைப்பும் ஆனந்தசங்கரி ஐயாவின் தமிழர் விடுதலைக் கூட்டணியும் பிரிந்து சென்று மீண்டும் 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரதேசசபைத் தேர்தலின்போதே எம்முடன் மீண்டும் வந்து இணைந்து கொண்டனர். தமிழ் மக்கள் எல்லாம் ஒற்றுமையாக இருக்கின்றனர். தமிழ் கட்சிகள் எல்லாம் ஒருமித்து இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகத் தான் அக்கட்சிகளையும் நாம் இணைக்க வேண்டியதாயிற்று.

அந்த அடிப்படையில் நாம் ஐந்து கட்சிகளாக இருக்கின்றோம். அப்படி இருக்கும்போது இலங்கை அரசாங்கம் எமக்குள் இருப்பவர்களில் சிலரை வைத்து தனது வேலையைக் காட்டுகின்றது. அதற்கு எம்மிடம் ஆதாரங்களும் இருக்கின்றது. ஆதாரங்கள் இல்லாமல் நாம் எதனையும் வெளியிடுவதில்லை. இருப்பினும், நாம் சர்வதேசத்தின் முன் எமது ஒற்றுமையை காட்டிக்கொண்டிருக்கின்றோம்.

எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கும் கொள்கை, யாப்பு இருக்கின்றன. இதற்கென ஒரு மாவட்ட அமைப்பு பிரதேச அமைப்பு தொகுதி அமைப்பு இளைஞர் அமைப்பு மகளிர் அமைப்பு கலாசார அமைப்பு என பல அமைப்புகள் இருக்கின்றன.

மாநாடு நடத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. இது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கு அவ்வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை அவர்களும் மேற்கொள்ளலாம். மேற்கொண்டுமிருக்கின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ரீதியில் நாம் மாநாடு எதுவும் மேற்கொள்ள முடியாது. இவ்வாறு சட்டம் இருக்கின்றது.  இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருப்பதன் காரணமாக ஏனைய கட்சிகளும் இதில் பலம் பொருந்தியவர்களாக இருக்கின்றார்கள்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை உடைத்துவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதென்பது முடியாத விடயம்.

எனவே இதனைப் பலப்படுத்தி எது இந்தக் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்தக் கட்சியின் மூலமாக எமது அரசியல் பணியை  ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து மேற்கொள்வதற்காக நாம் ஒன்றாக இருக்க வேண்டும்.

எமது தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வளர்ச்சியை பல்வேறுபட்ட நாடுகள் பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதுபோல் அவை உதவிகளை மேற்கொள்ளவும் தயாராக இருக்கின்றன. அந்த வகையில் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்திய விஜயத்தை  மேற்கொண்டுள்ளனர். அவர்கள் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர். 

மோடியுடனான சந்திப்பு மிகவுத் திருப்திகரமாகத் இருந்தது என்று சம்பந்தன் ஐயா தெரிவித்தார். ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை சற்றுக் குறைவாகவே இருக்கின்றது. இதற்கு முன்னரும் இது போலவே தெரிவித்தனர். ஆனால், இதுவரை எமக்கு எதுவும் தீர்வு கிடைத்தாக இல்லை. இருந்தாலும், சர்வதேச ரீதியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது.

இப்படி பிரதமரையோ, சுஸ்மா சுபராஜ்ஜையோ  சந்தித்துவிட்டால், எமக்கு வெள்ளித்தட்டில் தீர்வைத் தந்து விடுவார்கள் என்று அர்த்தம் இல்லை.
இலங்கையின் போராட்ட வரலாற்றில் பிராந்திய வல்லரசாக இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது இந்தியா.

இந்தியாவே இந்த 13ஆவது அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தது. எந்த ஒரு சர்வதேச நாடும் மேற்குலக நாடுகள் இந்தியாவின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவை வெறுத்து இந்தியாவை ஒதுக்கி விட்டு எமது மக்களுக்கு எந்த ஒரு தீர்வையும் தராது என்பது நாம் கண்ட வரலாறு.

இவ்வாறு மேற்குலக நாடுகளை வழிக்கு கொண்டுவருவதற்கு இந்திய அரசாங்கத்தினருடன் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மோடியை சந்திக்கக் கூடாது என்பதில் சுப்பிரமணியசுவாமி பல எதிர்ப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

அதுபோல் ஆனந்தசங்கரி இங்கிருந்து பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார். இவற்றை ஊடறுத்து இந்தியாவின் அரசியல் இராஜதந்திரத்தை உள்வாங்குவதற்காக எமது கட்சியினர் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றார்கள்.

இதன் பெறுபேறுகளை எதிர்காலத்தில் நாம் பார்க்கலாம். எமக்கான தீர்வு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், நாம் ஒரு தீர்மனத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் இல்லாவிட்டாலும், எமது சந்ததிகள் பிள்ளைகள் இந்த மண்ணில் தமிழர்கள் நாம் தமிழர்களின் அரசியல் பலத்தில் வாழ வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கம் எமது இளைஞர்களை கிராமம் கிராமங்களாகச் சென்று மாற்றுவதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அவர்களுக்கு வேலைவாய்ப்பு தருகின்றோம். அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றோம் போன்ற மாயைகளைக் காட்டி அவர்களை எதிர்வரும் தேர்தல்களில் தேர்தல் பிரசாரங்களுக்குப் பகிரங்கமாகப் பயன்படுத்தப் போகின்றார்கள்.

இதற்கு அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளனர். இதன் நோக்கம் தமிழ்த் தேசியத்தை தமிழ் இனத்திலிருந்து இல்லாமல் செய்வதற்கும் நில அபகரிப்பை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்குமாகும். இவற்றில் நாம் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எமது கலை, பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழரின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழரின் நிலம் பாதுகாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழரின் அரசியல் பலம் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, இனிவரும் காலங்களில் நாம் எமது அரசியல் பலத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழரசுக்கட்சிக்கு தான் ஆதரவாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை இன்று தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் பலமாக எது இருக்கின்றதோ அதற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்றே கேட்கின்றோம்.

அதற்காக தமிழர்களாக இருந்து கொண்டு மாற்றுக் கட்சிகளில் சோரம் போகும் அரசியல்வாதிகளின் பின்னால் நாம் செல்வோமாக இருந்தால் அந்த இடத்திலேயே எமது தேசியம் அழிக்கப்படுகின்றது' என்றார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X