2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வளர்ப்பு நாய்களை பதியும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் உள்ள வீடுகளில்; வளர்க்கப்படும் நாய்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை   செவ்வாய்க்கிழமையிலிருந்து  (26) ஆரம்பமாகவுள்ளதாக  மாநகரசபையின் கால்நடை பொதுச் சுகாதாரப் பிரிவு  வைத்திய அதிகாரி மல்லிகாதேவி அமிர்தலிங்கம் தெரிவித்தார்.

26ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர்  மாதம் 16ஆம் திகதிவரை மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவின் 09 பொதுச் சுகாதாரப் பகுதிகளில் வளர்ப்பு நாய்களை பதிவு செய்யும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.  இதன்போது, சுமார் 2,000 நாய்களை பதிவு செய்யும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

உள்ளுராட்சி மாநகரசபைக் கட்டளைச் சட்டத்தின்படி பதிவு செய்யாமல் நாய்களை வளர்ப்பது சட்டவிரோதமாகும்.

பொதுமக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லப்படும் இந்த இலவச நடமாடும்; சேவையின்போது, விசர் நாய் நோய்க்கு எதிரான தடுப்பூசி இலவசமாக ஏற்றப்படும்.

எனவே, இந்த நடமாடும்; சேவையின் உச்சப்பயனை பெற்றுக்கொள்ளுமாறு நாய் வளர்ப்பாளர்களை மட்டக்களப்பு மாநகரசபை சுகாதாரப் பகுதியினர் கேட்டுள்ளனர்.

குறித்த தினங்களில் இடம்பெறும் நடமாடும் சேவையை பொதுமக்கள் அந்தந்தப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்புகொண்டு அறிந்துகொள்ள முடியும்.

மேலும் கட்டாக்காலி மற்றும் தெரு நாய்களின்; தொல்லைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதுடன், தமது சூழலைச் சுத்தமாக வைத்திருக்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் பொதுச் சுகாதாரப் பிரிவு  வைத்திய அதிகாரி மல்லிகாதேவி தெரிவித்தார்.
'விசர் நாய்க்கடி இல்லாத இலங்கை' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் சமீப  நாட்களாக தொடர்ச்சியான விழிப்புணர்வூட்டல் இடம்பெற்று வந்துள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபைப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்தித் திட்டத்துக்கு  அமைவாக இப்போது இந்த நடமாடும்; சேவையும் நடைபெறவுள்ளது.

வீடுகளில் நாய்களை வளர்ப்போர் கட்டாயமாக நாய்களை பதிவு செய்துகொள்வதுடன், விலங்கு வைத்தியரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

விசர் நாய்க் கடிக்கு உள்ளானவர்கள் விசர் நாய் நோய்த் தடுப்புப் பிரிவுக்கு அல்லது அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விசர் நாய் நோய்க் கடியைத் தடுப்பதற்காக மிருக வைத்தியப் பிரிவும் சுகாதாரத் திணைக்களமும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு போதாமலுள்ளது. இந்த விடயத்தில் அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X