2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், அந்த மாகாணத்திற்கு வெளியிலிருந்து வேலையற்ற பட்டதாரிகளைத் தேர்ந்தெடுத்து நியமனம் வழங்கியுள்ள மேல் மாகாணக் கல்வி அமைச்சரான முதலமைச்சரை நாம் வெகுவாகப் பாராட்டுகின்றோம்'என இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணக் கல்வியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் மேல் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (26) அனுப்பி வைத்துள்ளது.

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் எம்.அனஸ் கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'பாடசாலைகளில் நிலவும் பாடவெற்றிடங்களின் தேவைக்கேற்ப நியமனம் வழங்கினால்தான் நியமனத்தின் நோக்கத்தை அடையலாம். புதிய நியமனம் பெற்று பாடசாலைகளுக்கான இட ஒதுக்கீட்டைப் பெற்;ற ஆசிரியர்களில் சிலர் சேவை முன் பயிற்சிக்குமுன் குறித்த பாடசாலைகளில் கடமையேற்றிருக்கின்றனர்.

இன்னும் சிலர் குறித்த பாடசாலைகளில் இதுவரை கடமையேற்றிருக்கவில்லை.

ஆனால், அரசசேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின்படி, நியமனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கமைய நியமனத்தை ஏற்றுக்கொண்டமை பற்றி குறித்த நியமன அதிகாரிக்கு நியமனம் பெற்றவர் அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் இதுவரை அப்படி எவரும் குறித்த நியமன அதிகாரிக்கு அறிவித்திருக்கவில்லை.

கல்வி வலயங்களுக்கு நியமிக்கப்பட்டவர்களும், பாடசாலைகளில் கடமையேற்காதவர்களில் சிலரும் கற்பிக்கப் பொருத்தமான பாட வெற்றிடங்களுள்ள பாடசாலைகளைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பாடசாலை குறித்தொதுக்கப்பட்டவர்களில் 25 சத வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு அவர்களால் கற்பிக்கப் பொருத்தமான பாடவெற்றிடமுள்;ள பாடசாலைககள் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.

கனிஷ்ட, சிரேஷ்ட மற்றும் உயர் வகுப்புக்களில் கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் பலர், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ள ஆரம்பப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக, பெண் ஆசிரியர்கள் பலர், போதிய போக்குவரத்து வசதிகளற்ற, ஆற்றைக்கடந்து சென்றடைய வேண்டிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எமது சங்கத்தின் (இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்) கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
 
எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு, இதுவரை பாடசாலைகள் குறித்தொதுக்கப்படாதோருக்கும், பாடத்துறைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யப்படாதோருக்கும், பாடசாலைகளில் நிலவும் பாடவெற்றிடங்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். என்றும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

இதன் பிரதிகள் மேல் மாகாண ஆளுநருக்கும், மேல் மாகாண முதலமைச்சருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X