2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிறுவர்வள நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாங்கேணி, பாம்கொலனியில் சிறுவர் வள நிலையம் நேற்று திங்கட்கிழமை (15)  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகள் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி  நிறுவனம் இந்நிலையத்தை திறந்துவைத்துள்ளது.

சிறுவர் உளநல மேம்பாட்டுக்கான சிறுவர் குழுக்களை வலுப்படுத்தும் திட்டத்தின் ஓரங்கமாக திறந்துவைக்கப்பட்டுள்ள இவ்வள நிலையம்,  சிறுவர்கள் ஒன்றுகூடவும் தங்களின் புறக்கிருத்திய ஆற்றல்களை மேம்படுத்தவும் உதவும்.

மேலும், சிறுவர்களின் ஆய்வு மற்றும் வாசிப்புத்திறனை மேம்படுத்துவதற்காக சிறுவர் நூலகமும் இவ்வள நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்கோ நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கோதை பொன்னுத்துரை தெரிவித்தார்.

மாங்கேணிக்கிராம அலுவலகர் பிரிவில் சிறுவர்கள் 65 பேரைக் கொண்ட கிராம சிறுவர் உரிமைகள் கண்காணிப்புத் தொண்டர்குழு உருவாக்கப்பட்டுள்ளதாக திட்ட அலுவலர் எஸ்.கீதானந்தி தெரிவித்தார்.

சிறுவர்களின் தேகாரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
சிறுவர்களின் சிந்தனைச் சிதறல்களை ஒருமுகப்படுத்துவதற்கும் வீணான கருமங்களில் தங்களது நேரத்தை கழிப்பதை தவிர்க்கவும் இது உதவுமெனவும் அவர் கூறினார்.

இந்த நோக்கங்களை அடைவதற்காக சமூகமட்டத்தில் சிறுவர்களின் நலன்களை கவனிப்பதற்கான தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தத் திறப்பு விழாவில் அடிப்படைத் தேவைகள் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி வாணி சுரேந்திரநாத், திட்ட இணைப்பாளர் எஸ்.கணேஸ், கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி   நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் கோதை பொன்னுத்துரை, திட்ட அலுவலர் எஸ்.கீதானந்தி, வெளிக்கள உத்தியோகஸ்தர் கே.ஜுஜிதா, மாங்கேணி கிராம அலுவலகர் கே.மதிகரன், கிராம மக்கள், சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X