2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இலங்கையில் பறங்கியர் சமுதாயத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும்: நோர்மன் பல்தஷார்

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 27 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

இன்னமும் இரண்டு, மூன்று தசாப்தகாலத்தில் இலங்கையில் பறங்கியர் சமுதாயத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகிவிடும் என பறங்கியர் சமூக அமைப்பின் திருகோணமலை கிளைத் தலைவர் நோர்மன் பல்தஷார் தெரிவித்தார்.

ஒக்டோபர் 26ஆம் திகதி பறங்கியர் தினமாகும். இந்த நிலையில், பறங்கியர் தினத்தை கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின்  சின்ன உப்போடையில் பறங்கியர் கலாசார மண்டபம் ஞாயிற்றுக்கிழமை (26) திறந்துவைக்கப்பட்டது. இதன் பின்னர் இங்கு நடைபெற்ற கிழக்கு மாகாண பறங்கியர் சமூக ஒன்றுகூடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

 'அந்தக் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த பறங்கியர்கள் நல்ல பொருளாதார நிலையில் இருந்தார்கள். சமய நடவடிக்கைகளில் கூடுதல் பங்கெடுத்தார்கள். 

பறங்கிமொழி அந்தக் காலத்தில் சிறப்பாக இருந்தது. பெண்கள் சட்டைகள் அணிந்து, ஆண்கள் காற்சட்டைகள் அணிவது எல்லாம் சிறப்பாக இருந்தது. இப்பொழுது பறங்கிப் பெண்கள் ஜீன்ஸ்சுக்கும் ரீசேர்ட்டுக்கும் மாறிவிட்டார்கள். மொழி மறைந்து வருகின்றது. கலாசாரம் அருகி வருகின்றது. இது வேதனையளிக்கின்றது.

பெரும்பாலான வீடுகளில் பறங்கிமொழி மறக்கடிக்கப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. பறங்கியர் சமுதாயத்தினரிடையே கலப்புத் திருமணம் அதிகரித்துவிட்டதால், எமது பறங்கிமொழி, கலாசாரம், பண்பாடுகள், பாரம்பரியங்கள் எல்லாமே இருந்த இடம் தெரியாமல் போகக்கூடிய ஆபத்து உள்ளது.

அந்தக் காலத்தில் பறங்கியர் திருமணங்கள், மரண வீடுகள் எல்லாம் பறங்கியர் சமுதாயத்தை ஒன்றுகூட்டும் ஒரு நிகழ்வாக அவர்தம் வீடுகளிலேயே நடக்கும்.  ஆனால், அந்தப் பாரம்பரியங்கள் எல்லாம் இப்பொழுது தலைகீழாக மாறிவிட்டது. இப்பொழுது பொது மண்டபங்களிலேயே எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றன. அதிலும், பறங்கியர் சமுதாயம் முழமையாக பங்குபற்றுவதில்லை.

அன்றைய பறங்கியர் சமுதாயம் கூட்டாக வாழ்ந்தது. இன்னமும் 25 வருடங்கள் சென்ற பின்னர் பறங்கியர்களின் மொழி சிங்களமாகவும் தமிழாகவுமே இருக்கும்.

இந்தப் பாதிப்புக்கு கலப்புத் திருமணம்தான் காரணம். இந்த விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து சிந்திக்கும் சமுதாயமாக பறங்கியர்கள் மாறவேண்டும். பறங்கியர்கள் பறங்கிய மொழியிலும் பொதுக் கல்வி வளர்ச்சியிலும் கூடிய கவனம் எடுக்க வேண்டும்.

இந்த சமுதாயத்தின் வரலாற்றை நாம் அழிந்து போகவிடக்கூடாது. எந்தவொரு சமூகமும் வாழவேண்டும் என்றால், அங்கு மொழியும் சமயமும் இருக்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால், அந்த சமூகம் அழிந்துபோகும்.

எமது பறங்கியர் சமுதாய அமைப்பில் நீங்கள் சேர்ந்து கொண்டு சேவையாற்ற முன்வரவேண்டும். உதவியை எதிர்பார்க்காமல் இந்த சமுதாயத்தின் பாரம்பரிய கலை கலாசார விழுமியங்களை பாதுகாப்பதற்காக இணைந்துகொள்ள முன்வாருங்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X