2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அ.இ.ம.கா. உறுப்பினர்கள் ஒரு சில அமைச்சுக்களினால் புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 06 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையின் ஒரு சில அமைச்சுக்களினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால், கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட வாக்கெடுப்பில், குறித்த அமைச்சுக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பது தொடர்பில் மீள்பரிசீலனை செய்ய வேண்டி ஏற்படும் என்று கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணசபையின் ஒரு சில அமைச்சுக்களினால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, சிப்லி பாறூக் மற்றும் நான்  ஆகிய மூன்று உறுப்பினர்களும் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றோம்.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை (5) கிழக்கு மாகாண ஆளுநர் அல்மிரட் மொஹான் விஜேவிக்ரமவைச் சந்தித்து தெரியப்படுத்தியதுடன், தெளிவாக எடுத்துக்கூறினேன்.

அதாவது, கிழக்கு மாகாணசபையில் அங்கத்துவம் பெறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள், இந்த ஒரு சில அமைச்சுக்களினால் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் தொடர்ச்சியாக புறக்கணிப்படுகின்றனர்.

குறிப்பாக, விவசாய அமைச்சினால் அண்மையில் வழங்கப்பட்ட வேலைவாய்ப்பில் எமது கட்சி புறக்கணிப்பட்டுள்ளது. அதேபோன்று, குறித்த அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் நாம் புறக்கணிக்கப்படுகின்றோம்.

அதேபோன்று, எமது ஆதாரவாளர்கள் திட்டமிட்டு இடமாற்றப்படுவதுடன், புறக்கணிப்பு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநருடனான சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்ட வாக்கெடுப்பில் குறித்த அமைச்சுக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பில் எமது கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
இதைக் கேட்ட கிழக்கு மாகாண ஆளுநர்,  இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதாகவும் இவ்வாறு புறக்கணிப்பு இடம்பெறுவதற்கு  எதிராக தான் நடவடிக்கை எடுப்பதாகவும் என்னிடம் உறுதியளித்துள்ளார்' எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X