2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பின்னிப்பிணைந்த சகவாழ்வே சிறப்பு: சிப்லி பாறூக்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 07 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தமிழ்ச் சமூகம் முஸ்லிம்களை நம்பியும் முஸ்லிம் சமூகம் தமிழ்ச் சமூகத்தை நம்பியும் வாழ்கின்ற பின்னிப்பிணைந்த சமூக சகவாழ்வே சிறப்பானது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

பிரிந்து செல்வதால் பயனேதும் இல்லை. அதனால், பேராபத்துகளுக்கும்  பிரித்தாளும் வெளியாரின் சூழ்ச்சிகளுக்கும் நாங்கள் ஆளாக வேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.

வாழ்க்கைத்திறன் பயிற்சியை பூர்த்திசெய்த 65 இளைஞர்களுக்கு சான்றிதழ்களுடன், இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அட்டைகளும்   வழங்கும் நிகழ்வு ஏறாவூரில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஏறாவூர் அந் - நஹ்ல் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'இந்த நாட்டில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பேரழிவால் ஒரு பரம்பரை பாதிக்கப்பட்ட அதேவேளை  தமிழ், முஸ்லிம், சிங்கள சமூக இளைஞர் பரம்பரையினருக்கு இடையில் இன சௌஜன்யமும் சீர்குலைக்கப்பட்டது. தற்போது அமைதியான சூழல் நிலவுகின்றபோதிலும்,  இனங்களுக்கு இடையில்  இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பின்னிப்பிணைந்திருந்த சமூக உறவு, இன்னமும் பழைய நிலைமைக்கு கட்டியெழுப்படவில்லை.  அந்தக் காலத்திலிருந்த சகவாழ்வை மீண்டும் கொண்டுவருவதற்கு இளைஞர் சமூகம் அணிதிரள வேண்டும். இதற்கு மூத்தோர் வழிகாட்ட வேண்டும்.

இந்த நாட்டில் எத்தனையோ  அபிவிருத்திகளை நாம் மேற்கொண்டாலும், இன ஐக்கியம் தளைத்தோங்காவிடின்  எதுவும் பிரயோசனமற்றதாகப்; போகும். பின்னர், இதன் மூலமாக அபிவிருத்திகளும் அழிவுக்குள்ளாகும்.

மற்றைய சமூகத்துடன்; இணைந்து பரஸ்பர உதவி ஒத்தாசை மேற்கொண்டு ஐக்கியமாக வாழ்கின்ற சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒரு சமூகத்தை வெறுத்து, இன்னொரு சமூகம் இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல, முழு நாட்டிலும் வாழமுடியாது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

எதிர்கால இளைஞர் சமூகம் தங்களது சிறந்த அணுகுமுறைகளின் ஊடாகவும் கல்வி மறுமலர்ச்சியின் ஊடாகவும் இணைந்த சமூக வாழ்வைப் பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போதும், சமூக ஒற்றுமை சீர்குலையாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். இளைஞர் சமூகம் சிறந்த முன்மாதிரிகளையும் கடைப்பிடிக்க வேண்டும்' என்றார்

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.என்.நைறூஸ், இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.ஐ.எம்.றம்ஸி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம்.சஜீர் உட்பட  பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X