2025 மே 19, திங்கட்கிழமை

'கல்வி சமூகத்தில் வெறுமனே மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது'

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தற்போதைய நிலையில் கல்வி சமூகத்தில் மாற்றத்தை மேற்கொள்வது,  கல்வி நிலையை சீர் செய்வது என்பது வெறுமனே பழியைச் சுமப்பது,  சுமத்துவதாக இருக்கக்கூடாது என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

'பாடசாலைகளின் திருவிழாக்காலம் என்றால் அது இத்தகைய விளையாட்டுப் போட்டிகளே. இதுவரை காலமும் பாடசாலையின் நிகழ்வுகளுக்கு அழைக்கப்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள், தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரதம அதிதிகளாகவும் அழைக்கப்படுகின்ற நிகழ்வுகளும் தற்போது அரங்கேறிக் கொண்டே வருகின்றன.

மாணவர்களின் பல்வேறு திறன்களை ஊக்குவிப்பது இவ்வாறான பாடசாலைகளே. அதிலும் பாடசாலை சமூகத்தையும் சுற்றுப்புறச் சமூகத்தையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியடையும் சிறப்பான நிகழ்வுகளே இத்தகு விளையாட்டுப் போட்டிகள்.

எமது உயிரைத் திறம்பட வளர்க்க, உடலைத் திறம்பட வளர்க்கவேண்டும். அதற்கு உதவுவனவே உடற்பயிற்சிகள். ஆனால் தற்போது பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டி நிகழ்வில் உடற்பயிற்சி கண்காட்சியின் போது, உடற்பயிற்சிகளுக்கு மாறாக மேற்கத்தேய நடனங்களை பயிற்றுவிப்பதே வழக்கமாகி விட்டது. ஆனால் அதுவும் ஒருவித அழகுதான்.

மாணவர்கள் நன்றாகப் படிக்கவேண்டும். அதில் பெற்றோர்களும் அதிகம் கவனம் எடுக்கவேண்டும். சாதாரணமாகப் படித்து தற்போது உள்ள போட்டி நிலையில் சமாளிக்க முடியாது. எனவே, உக்கிரமாக நன்றாக கஷ்டப்பட்டு படிக்கவேண்டும். பெற்றோர்களும் தொலலைக்காட்சிகளுக்கு ஓய்வுகொடுத்து பிள்ளைகளை வலிந்து படிக்கச் செய்யவேண்டும்.

எமது பாடாலைகள் சிறப்புறும் வகையில் எமது வலயங்களும் சிறப்பு வேண்டும். எனவே, சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை அதிபர்கள் எமது கவனத்துக்கு கொண்டு வருதல் வேண்டும்.

இருக்கின்ற மூலவளத்தை எமது மூளை வளத்தைக் கொண்டு சிறப்பாக வினைத்திறன் மிக்க உருவாக்கத்தை மேற்கொள்ள வேண்டும். எமது உழைப்பு எமது கல்வி நிலையிலும் இருக்கவேண்டும் இருக்கும் என்ற நம்பிக்கை எமக்கு எப்போதும் இருக்கிறது' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X