2025 மே 19, திங்கட்கிழமை

'நல்லாட்சியினூடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தற்போது கிழக்கு மாகாணத்தில்  உருவாக்கப்பட்டிருக்கின்ற  இன ஐக்கியம் நிறைந்த நல்லாட்சியின் ஊடாக சமூகங்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வு காணப்படவேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கின்றது என்று மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்  தெரிவித்தார்.

ஏறாவூர் பிரதேச செயலக முன்றலில் சனிக்கிழமை (28) மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்; கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'முஸ்லிம்களும் தமிழர்களும் இந்த மாவட்டத்தில் இணைந்து வாழ்கின்றார்கள். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று மக்களை   மாவட்ட நிர்வாகத்தினர் ஒருபோதும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அரசியல் வேறுபாடுகளையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் செய்ய மாவட்ட நிர்வாகம் ஒருபோதும் எவரையும் அனுமதிப்பதில்லை.

இன ஐக்கியம் மட்டுமே பிரதேசத்துக்கும் மாவட்டத்துக்கும் மாகாணத்துக்கும் முழுநாட்டுக்கும் அமைதியை கொண்டுவரும்.
மேலும், ஏறாவூர் பிரதேசத்தில்  உருவாகின்ற அரசியல் தலைமைத்துவங்கள்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் பெருந்துணை புரிகின்றன.

அரசியலின் உச்ச அதிகாரத்தை ஏறாவூர் மண் தொட்டு நிற்கின்றது. ஏறாவூர் பிரதேசம் மாகாண முதலமைச்சரையும் பிரதித் தவிசாளரையும் மாகாணசபை உறுப்பினரையும் நாடாளுமன்ற உறுப்பினரையும் கொண்டு அலங்கரிக்கின்றது.  ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் ஏறாவூரை சேர்ந்த ஒருவர் அரசியலின் உச்ச அதிகாரத்திலிருந்து இந்த மாவட்டத்துக்கு சேவையாற்றினார்.

ஆக மொத்தத்தில்,  எல்லா உச்ச அரசியல் அதிகாரத்தின் பதவிகளையும் ஏறாவூர் மண் அடைந்திருக்கின்ற அதேவேளை, இந்த ஊரை தலைமை தாங்குகின்ற அரசியல் தலைமைத்துவங்கள் எந்தவித வேறுபாடும் இல்லாமல்,  ஒட்டுமொத்தமாக இந்த மாவட்டத்துக்கு சிறந்த நிர்வாகத்தை நடத்திச்செல்வதில் எனக்கு பெருந்துணை புரிந்து நிற்கின்றார்கள் என்பதை இவ்விடத்தில் பெருமையோடு கூறிக்கொள்கின்றேன்.

நிர்வாகத்தை கொண்டுசெல்வதில் ஏறாவூரின் அரசியல் தலைமைத்துவங்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்குவதனால்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில்  வாழ்கின்ற அனைத்து சமூக மக்களும் நன்மை அடைகின்றார்கள்.

முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுபப்pனருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், மாகாணசபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம்.சுபைர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் இந்த மாவட்டத்தில் சீரான முறையில் நிர்வாகத்தை கொண்டுசெல்வதில் காட்டுகின்ற அக்கறை ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றது.

மாவட்ட செயலகத்தின் அத்தனை நிர்வாக செயற்பாடுகளுக்கும் இந்த ஊரின் அரசியல் தலைமைத்துவங்கள் இணைந்து பணியாற்றிவருவது சிறப்பம்சமாகும். அதற்கேற்றாற்போல இந்தப் பிரதேச செயலகத்தின் செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா எந்நேரமும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவை செய்கின்ற சிறந்த நிர்வாகியாக உள்ளார்.

ஏறாவூர் பிரதேசம் சன அடர்த்தி மிக்கது. இந்த ஊர் மக்கள் எதிர்கொள்கின்ற காணிப் பிரச்சினை, நிலத்தடி நீர் மாசடையும் பிரச்சினை, திண்மக்கழிவு அகற்றும் பிரச்சினை, பாடசாலை இடநெருக்கடி  என்பனவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்படவேண்டும். சமூக ஐக்கியத்துடனும் புரிந்துணர்வுடனும் மனிதாபிமானத்துடனும் இப்பிரச்சிரச்சினை அணுகப்பட வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X