2025 மே 19, திங்கட்கிழமை

'யுத்த காலத்தில் முஸ்லிம்களின் உடைமைகள் அழிக்கப்பட்டன'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்த காலத்தின்போது முஸ்லிம்களுடைய உயிர்;கள், உடைமைகள், பூர்வீக வாழ்விடங்கள் என்பன  திட்டமிடப்பட்ட வகையில் அழிக்கப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று வெள்ளிக்கிழமை  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'சுனாமிக்கு பின்னரான காலப்பகுதியில் சமூகத் தொண்டு நிறுவனங்களூடாகவும் அரசசார்பற்ற நிறுவனங்களூடாகவும் அரச திட்டங்களூடாகவும் திட்டமிட்ட அடிப்படையில் முஸ்லிம்களின் பூர்வீகமான வாழ்விடங்களில் குடியேற்றங்கள் செய்யப்பட்டு அவைகள் அபகரிக்கப்பட்டிருக்கின்றன.

எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் அவ்வப்போது முஸ்லிம்களுடைய காணிகளில் அத்துமீறல் செய்வதும் இதற்கு தமிழ் அரசியல்வாதிகள் பக்கபலமாக இருப்பதும் அரச நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு  அழுத்தங்களை கொடுப்பதன் ஊடாக  அவர்கள் நினைப்பதை சாதிக்கின்ற நிகழ்வு யுத்த காலம், அதன் பின்னரான ஆயுதக்குழுக்களின் காலம், ஆட்சி மாற்றத்துக்கு  முன்னரான காலம், ஆட்சி மாற்றத்துக்கு பின்னரான காலம் என்று  இன்றுவரை தொடர்கின்றது.

யுத்த காலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை அப்போதிருந்த பெறுமதியிலும் பார்க்க மிகக்குறைந்த விலைகளில் இன்னொவருக்கு  கொடுங்கள் என்ற விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஏராளமான ஏக்கர் நிலப்பரப்புள்ள முஸ்லிம்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்கப்பட்டுமுள்ளன.

அண்மைக்காலமாக, தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பூர்வீக காணிகளில் அவர்கள் மீண்டும்  சென்று குடியேறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அங்கு நடைபெறுகின்ற சிறிய சிறிய அபிவிருத்தி வேலைகளை கூட செய்ய விடாமல் தடுப்பது என்பது அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுடைய அடிப்படை உரிமையை மீறுகின்ற செயலாகும். இதற்குப் பின்னால் அரசியல்வாதிகளின் கரங்கள் இருப்பதென்பது வெளிப்படையான விடயம்.

பல விட்டுக்கொடுப்புகளுக்கு மத்தியில் தமிழ்,  முஸ்லிம் உறவுகள் வளரவேண்டும் என்ற எண்ணத்துக்கு இவ்வாறான செயல்கள் முட்டுக்கட்டையாகிவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

கடந்தகால கசப்பான சம்பவங்கள் மறைந்துவருகின்ற இத்தருணத்தில் இவ்வாறான செயற்பாடானது முஸ்லிம்களின் மத்தியில் மீண்டும் ஓர் அச்ச நிலையை  தோற்றுவித்திருக்கின்றது. ஆகவே, இது சம்பந்தமான விடயங்களை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்புகளும் ஒன்றிணைய வேண்டிய தேவைப்பாடு காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது' என்றார்.

அதேவேளை, இவ்வாறான இன நல்லுறவு  முன்னெடுப்புகளைத் தடுக்கின்றவர்களை சமாதானத்தை குழப்புகின்றவர்களாக கருதி அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X