2025 மே 19, திங்கட்கிழமை

காணி அதிகாரத்தை ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கு வழங்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர பிரதேச செயலக நிர்வாகத்துடன் சுமார் 25 வருடங்களாக தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ள ஐந்து கிராம அலுவலக பிரிவுகளினதும்  காணி அதிகாரத்தை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்கு  வழங்கவேண்டும் என்று  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு திங்கட்கிழமை (06) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் அமைந்துள்ளது. இந்தச் செயலகம் மாவட்டத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பையும் அதிகூடிய சனத்தொகை அடர்த்தியையும் கொண்டதாக உள்ளது.  

1990ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக, ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லையாக இருக்கின்ற ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ளடங்குகின்ற ஐந்து முஸ்லிம் கிராம  அலுவலர் பிரிவுகளை  சேர்ந்தவர்கள் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதிலும்,  காணி நிர்வாக நடவடிக்கையை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகம் மேற்கொண்டுவருவதை குறிப்பிடலாம். இதனால், காணி தொடர்பான விடயங்களுக்கு மாத்திரம்  ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தை எமது மக்கள் நாடவேண்டியுள்ளது.

கடந்த 30 வருடகால  பயங்கரவாத நடவடிக்கையினால் தங்களது உறவுகளையும்  சொத்துக்களையும் இழந்து வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற  இவர்கள், மீன்பிடியையும் விவசாயச் செய்கையையும் பிரதானமாக கொண்டு வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்றனர்.  இவ்வாறு சுமார் 30 அல்லது 40 வருட பூர்வீகமான இந்தக் காணிகளில் வாழும் இந்த மக்கள் காணி அனுமதிப்பத்திரமின்றி உள்ளனர்.

சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளில் அரச காணிகளை கடந்தகால அரசியல் செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதிகளுக்கும்  தனவந்தர்களுக்கும் தனிப்பட்ட தேவைகளுக்காக வழங்கியுள்ளதுடன், அவ்வாறு வழங்கப்பட்டுள்ள காணிகள் எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படாமல் காணப்படுவது கவலைக்குரியது.

இந்த நிலையில், 2011ஆம் ஆண்டு எல்லை மறுசீரமைப்பு செய்தலுக்கான முன்மொழிவுகளின் அடிப்படையில்,  மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து அரசியல் பிரமுகர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முன்மொழியப்பட்ட புதிய ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளைக்; கொண்ட ஒரு புதிய பிரதேச செயலக பிரிவை உருவாக்கித்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்வதுடன்,  இவ்வாறு புதிய எல்லையை கொண்ட பிரதேச செயலகம் உருவாக்கப்படும்போது மேற்படி பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்பதையும்; தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X