2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'தமிழ் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும்'

Gavitha   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

போர் மற்றும் அனர்த்தங்களால் அழிந்து, நலிந்து, கலாசார பண்பாடுகளை இழந்து இருக்கும் தமிழ் சமூகத்தின் வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும். அப்போது தான் தமிழ் வாழும்.  இதற்கு கடின உழைப்பும் கல்வியாளர்களின் ஆலோசனையும் தேவை இதனை ஏற்படுத்தத்தான் நான் இலங்கைக்கு வந்தேன் என்று உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் டென்மார்க் கிளையின் தலைவரும்  டென்மார்க் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் நெல்லியடி கரவெட்டியைச் சேர்ந்த தறுமன் தர்மகுலசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்குமான சந்திப்பு வெள்ளிக்கிழமை (10) மாலை மட்டக்களப்பு கலை இலக்கிய பேரவையின் முக்கியஸ்தகர் த. ஈஸ்வரராஜாவின் வதிவிடத்தில் நடைபெற்றது.

பேராசிரியர் எஸ். மௌனகுருவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

மகளிர் விவகார மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எஸ். சதிஸ்குமாரின் 5 நூல்களின் வெளியீடு கடந்த (31) பண்டார நாயாக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றபோது, அதில் பங்கு கொள்வதற்காக இலங்கை வந்தேன். அதைத் தொடர்ந்து மட்டக்களப்புக்கு வந்துள்ளேன்.

டென்மார்க்கில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து பணிபுரிகின்றேன். அரசியல் இல்லாமல் வாழ முடியாது. தமிழர்கள் தார்மீக ஜனநாயக பண்புகளோடு வாழவேண்டுமாக இருந்தால் சமூக சிந்தனை, அரசியல் சிந்தனை மற்றும் பொருளாதார சிந்தனை இல்லாமல் தமிழை வளர்க்க முடியாது. 1967இல் மட்டக்களப்பில் தமிழ் சங்கம் உருவாக்கப்பட்டும். அதற்கென ஒரு கட்டடம் இல்லாமல் உள்ளது கவலையே.

உலகில் புலிகள் பதிவு செய்யப்பட்டது டென்மர்ர்க்கில் மட்டும் தான். 1983 தொடக்கம் 1985 வரையான காலப்பகுதியில் மட்டும் தான் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழர்கள் வந்தார்கள். இலக்கியத்தை வளர்ப்பதற்கு மொழி ஒரு ஊடகமாகும்.  புலம்பெயர்ந்தவர்களின் வீடுகளில் தமிழ் இருக்க வேண்டும் ஏன் இலங்கையில் கூட படித்த கல்வியியலாளர்களின் வீடுகளில் கூட இந்தியாவில் உள்ளது போல் ஆங்கிலம் கலந்த தமிழைப் பேசுகின்றார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாமல் உள்ளது பெரும் சாபக்கேடு. இலக்கியச் செம்மல் எஸ். பொன்னத்துரையின் (எஸ்போ)  மரணச்சடங்கு அவுஸ்திரேலியாவில் நடைபெற்றபோது,  ஆங்கிலத்தில் நினைவஞ்சலி உரை ஆற்றியதைக் காணமுடிந்தது. எஸ்போவுக்கும் எனக்கும் உள்ள அனுபவங்களை தமிழில் நூலாக வெளியிடவுள்ளேன்.

சமூகம், அரசியல், இலக்கியம் பற்றிப் பேசுகின்றோம் புலம் பெயர் நாடுகளில் உள்ள அடுத்த தலைமைத்துவத்துக்கு தமிழ் ஊட்டப்பட வேண்டும். இதில் பெற்றோர் அக்கறை செலுத்த வேண்டும். புலம்பெயர்ந்தவர்களிடம் பணமும் அறிவும் உள்ள பொருளாதார குழுவுடன் இலங்கையில் உள்ள பொருளாதார குழுவும் இணைந்து செயல்படுவதன் மூலம் இதை இலகுவில் அடையலாம்.

கனடா மற்றும் அமெரிக்கா தமிழ் முதலீட்டாளர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். இலங்கை முதலீட்டாளர் சபையோடு சந்திப்பொன்றை டென்மர்ர்க்கைச் சேர்ந்த எனது மகனின் மாமனார் ஏற்படுத்தியிருந்தார். பின்பு யாழ்ப்பாணம் சென்று வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் மற்றும் இந்திய துணைத் தூதுவரோடு சந்திப்பை ஏற்படுத்தியிருந்தேன் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X