2025 மே 19, திங்கட்கிழமை

'சமாதானக்காற்றை சுவாசிக்க முடியாதவர்களாக சிறுபான்மையினர் இருந்தனர்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'முப்பது வருடகால யுத்தம்  முடிவடைந்தபோதிலும், உண்மையான சமாதானக் காற்றை சுவாசிக்க முடியாதவர்களாக சிறுபான்மையினர் புழுங்கிக்கொண்டிருந்தனர். உண்மையில், யுத்தத்தின்போது இருந்த அச்சத்தை விட, யுத்தம் முடிவடைந்த பின்னரே அச்சத்துடன்  நாம் வாழ்ந்துகொண்டிருந்தோம்' இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

மேலும் குறிப்பாக, தமிழ் மக்களை விட்டு யுத்த பீதி நீங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

ஏறாவூரில் சனிக்கிழமை (11)  அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த பின்னர்,  அரபா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'தற்போது நல்லாட்சியின் கீழ் நாம் வாழ்ந்துவருகின்றோம். ஊழலற்ற, இலஞ்சமற்ற தெளிவான கொள்கையில் எம்முடன்  நாடு பயணிக்கின்றது.  100 நாட்களுக்குள் ஊழல்களை களைவதற்கான தெளிவான வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளதை நாம் காண்கின்றோம்.

தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வு காணக்கூடிய மனநிலை கொண்டவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் நாம் கண்டுகொள்ள முடியும்.

இவர்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவர்களாக இருக்கின்றார்கள். அவர்களின் மனங்களில் இனவாத சிந்தனை இல்லை என்பதை இந்தக் குறுகியகால ஆட்சியில் நிரூபித்துள்ளார்கள். இத்தகைய நல்ல மனநிலை கொண்டவர்களின் நல்லாட்சியை தக்கவைப்பதற்கான முன்னெடுப்புகளை சிறுபான்மையினர் எடுக்கவேண்டும்.

சிறுபான்மை சமூகத்துக்கு  கௌரவம் அளித்து அரசியல் அங்கிகாரமும் வழங்குவதற்கான தெளிவான முன்னெடுப்புக்கள் தற்போது இடம்பெறுவதை நாங்கள் காண்கின்றோம்.
இந்த அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது. அதேபோன்று,

தமிழ்ச் சமூகமும் இந்த அரசாங்கத்தின் கரங்களை பலப்படுத்தி, சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக்கொள்ள தங்களால் முடிந்த அனைத்தையும் மேற்கொள்ளவேண்டும்.

எமது உரிமைகளையும் அரசியல் அபிலாஷைகளையும் பெற்றுக்கொள்ள கனிந்துள்ள சந்தர்ப்பம் இது என்று  நான் கருதுகின்றேன். இதைவிட சிறந்ததொரு சந்தர்ப்பம் இனிக் கிட்டப்போவதில்லை.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே கொடியின் கீழ் அணிதிரண்டு நின்றாலன்றி, இது சாத்தியமாகுவதில்லை.  கூடிய விரைவில்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரலாம்' என்றார்.

இந்த நிகழ்வில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.ஐ.தஸ்லீம், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி கலையரசி துரைராஜசிங்கம் உட்பட இன்னும் பல பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X