2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தர்ம நிதியில் மோசடி: இளைஞனுக்கு பிணை

Kanagaraj   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தர்ம நிதிக்காகத் ஆரம்பிக்கப்பட்ட  வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாகப் பணம் பெற்று வந்த இளைஞனுக்கு படிப்பினை தரும் நீதிமன்றக் கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலரான மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

ஏறாவூரைச் சேர்ந்த அப்துல்லாஹ் (11 மாதம்) என்ற வறிய நிலையிலுள்ள குழந்தை ஒன்றுக்கு இருதய வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்காக சமூக ஆர்வலாரான நஸீரினால் அவரது முகநூல் மூலம் நிதி திரட்டப்பட்டது.

குறித்த முகநூல் மூலமாக வங்கிக் கணக்கிலக்கம் அந்தக் கணக்கிலக்கத்துக்கு நாளாந்தம் கொடையாளிகள் தர்மம் செய்யும் நிதி, கையிருப்புத் தொகை போன்ற விவரங்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த வங்கிக் கணக்கு விவரங்களை கச்சிதமாகப் பயன்படுத்தி மோசடிக்கார இளைஞன் அந்த வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு இலட்சத்து ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் பணத்தை தனது நண்பர்கள் இருவரின் கணக்குக்கு மாற்றி பணத்தைப் பெற்று வந்துள்ளான்.

இது தொடர்பாக விசாரணை செய்த ஏறாவூர் பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு மோசடியில் ஈடுபட்ட நபரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

பொலிஸாரின் அறிக்கையை பரிசீலித்த மட்டக்களப்பு மாவட்ட நீதவான் என்.எம். அப்துல்லாஹ் 'குழந்தையின் சத்திரசிகிச்சைக்குத் தேவையான ஏழு இலட்சம் ரூபாவையும் சம்பந்தப்பட்டவர் செலுத்தி பிணையில் செல்லலாம்' என அறிவித்ததன் படி ஏழு இலட்ச ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரிவின் மூலம் செலுத்தப்பட்ட ஏழு இலட்சம் ரூபாவையும் உடனடியாக கணக்கில் வைப்பிலிடும்படி நீதவான் கட்டளை பிறப்பித்ததற்கமைய ஏறாவூர் மக்கள் வங்கியில் அத்தொகை வைப்புச் செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர் எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 31 ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 6 ஆம் திகதி வரை மேற்படி ஏறாவூர் மக்கள் வங்கிக் கிளையின் குறித்த வங்கிக் கணக்கிலிருந்து வெவ்வேறு  தொகைகளில் இந்தப் பணத்தொகை பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது.

குறித்த குழந்தையின் இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக சுமார் ஏழு இலட்ச ரூபாய் செலவுத் தொகை தேவைப்பட்டதால் தனது முகநூல் மூலம் பரோபகாரிகளிடமிருந்து நிதி திரட்டப்பட்டதாக சமூக சேவையாளரான எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X