2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'மரணிக்கும்வரை கல்வியை பற்றி பேச ஆசைப்படுகின்றேன்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'மரணிக்கும்வரையும்; கல்வியை பற்றிப் பேசுகின்ற ஓர்  அரசியல்வாதியாக  இருப்பதற்கு நான் ஆசைப்படுகின்றேன்' இவ்வாறு  வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

35 மாணவர்களுக்கு  கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு, ஏறாவூர் வாழ்வின் எழுச்சி அலுவலகத்தில்  இன்று  வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் கல்வியை பற்றி எல்லோரும் பேசவேண்டும். கல்வி ஒரு சமூகத்தை எழுச்சி பெறச் செய்யும் ஆயுதமாக இருப்பதால், இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது.

கல்வியை பற்றிய விழிப்புணர்வு இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற எல்லா சமூகத்தினருக்கும் சென்றடைய வேண்டும் என்று நான் அவாக் கொண்டுள்ளேன்.

கல்வியின் மகிமையை  நான் அறிந்ததால்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் மத்திய கல்வி வலயம் உருவாக்கப்படவேண்டும் என்று நான் குரல் கொடுத்து இன்று அந்தக் கனவு நனவாகி இப்பொழுது இலங்கையில், கல்வித் தரத்தில் முதலாவது வலயம் என்ற பெருமையை மட்டக்களப்பு மத்தி வலயம் கடந்த 4 வருடங்களாக தக்கவைத்துக்கொண்டு வருகின்றது.

இந்த மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தபட்சம் ஒரு பட்டதாரியாவது இருக்க வேண்டும் என்று நான் எடுத்துக்கொண்ட பிரக்ஞை, இன்று நிறைவேறியுள்ளது.  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரையிலிருந்து துறைநீலாவணை வரையும் தமிழ், முஸ்லிம் என்ற பேதமில்லாது 1,117 பட்டதாரிகள் கடந்த நியமனத்தின்போது நேர்முகப் பரீட்சைக்கு தோற்றினார்கள். இது எல்லா மாவட்டங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட மிகவும் அதிகமானதாகும்.

கல்வியில் இந்த துரித வளர்ச்சி எப்படி நடந்தது என்று அதிகாரிகள் இன்னும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வளர்ச்சி கூடக் காணாது இன்னும் கல்வியில் நாம் உயர்ச்சி காணவேண்டும் என்று நான் அவாக் கொண்டு இரவும் பகலும் அதற்கான சிந்தனைகளில் மூழ்கியிருக்கின்றேன்' என்றார்.

இந்த  நிகழ்வில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், கொழும்பு தலைமைக் காரியாலய சமுர்த்தி வேலைத் திட்டங்களுக்கான இணைப்பாளர் ஐ.அலியார், சமுர்த்தித் திட்ட மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் பி.குணரெட்ணம், ஏறாவூர் நகர பிதா எம்.ஐ.எம்.தஸ்லிம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உயர்தரத்தில் கற்கும் 35 மாணவர்களுக்கு மொத்தமாக 16 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்கப்பட்டதுடன், மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு மிகுதித் தொகை மாதாந்தம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X