2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினம் அனுஸ்டிப்பு

Gavitha   / 2015 மே 31 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எம்.அஹமட் அனாம்

சர்தேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினம் ஞாயிற்றுக்கிழமை (31) முதல்  எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்படுகின்றது.

இலங்கையில் மதுபாவனையில் முதல் இடத்தைப்பெற்ற மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில், இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு மற்றும் இருதயபுரம் மத்திய ஆகிய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகஸ்தர்களினால் சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட்டது.

இப்பேரணி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராசா  தலைமையில்  இருதயபுரம் கிழக்கு வங்கி உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுடன் இணைந்து பிரதேச செயலாளரினால் மட்டக்களப்பு எல்லை வீதி வைரவர் ஆலய முன்றலில் ஆரம்பித்து  வைக்கப்பட்டது.

இந்த பேரணியானது ஆலய முன்றலில் இருந்து பிரதான எல்லை  வீதி ஊடக மாமாங்கம் ஆலயம் வரை சென்று பேரணி நிறைவுற்றது .

இதனை தொடர்ந்து இருதயபுரம் மத்திய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி உத்தியோகஸ்தர்கள் மற்றும் பயனாளிகள் இணைந்து நடத்திய பேரணியானது,  மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி இருதயபுரம் மத்திய வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி பேரணி இடம்பெற்றது.

இடம்பெற்ற சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு நிகழ்வில் புகைத்தலற்ற, மதுபானமற்ற வளமான புதியதோர் சமுதாயத்தை உருவாக்குவோம்,  சிகரட் மூலம் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணத்தை நமது நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்துவோம், புகைத்தல் அற்ற குடும்பங்களை உருவாக்குவோம், ஒழுக்க நெறி நிறைந்த சுபீட்சமான கிராமத்தை கட்டி எழுப்புவோம் போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் தாங்கியிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபாவனையியை ஒழித்து மாவட்டத்தின் வறுமை நிலையினை இல்லாமல் செய்யும் வகையிலான விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது சர்தேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு கொடிவாரமும் அனுஸ்டிக்கப்பட்டதுடன் கொடிகளும் அதிதிகளுக்கு அணிவிக்கப்பட்டது.

புகைத்தலுக்கு எதிரான விழிப்புனர்வு ஊர்வலமொன்று காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியிலும் நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்த பிரதான நிகழ்வு சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் பிரதேச காரியாலயத்தில் இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .