Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 13 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மன்னார் முசலியில் மீள்குடியேறியிருக்கின்ற மக்கள் ஒருபோதும் சரணாலயக் காடுகளை அழிக்கவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
வில்பத்து விவகாரம் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்;கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர். நஜா முஹம்மத் கையொப்பமிட்டு அனுப்பிவைத்துள்ள மேற்படிக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்த நாட்டின் இயற்கைவளங்கள் எமது தேசத்தின் தேசிய சொத்துக்களாகும், அவற்றைப் பேணிப்பாதுகாத்து எமது அடுத்த தலைமுறையினருக்காக கையளிப்பதும் எமது கடப்பாடாகும்.
இதுவிடயத்தில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.
கடந்த அரசாங்க காலத்திலும் அதற்கு முந்திய காலப்பகுதியிலும் குறிப்பாக நாட்டின் பல்வேறு பிதேசங்களில் உள்ள காடுகள் யுத்தத்தின் காரணமாகவும் பாதுகாப்புத் தேவைகளுக்காகவும் இன்னோரன்ன அபிவிருத்தித் தேவைகளுக்காகவும் அழிக்கப்பட்டன.
குறிப்பாக கடந்த அரசாங்கத்தில் பதவி வகித்த பல அமைச்சர்களும் உயர் பதவிகளில் இருந்த பலரும் வடக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் மரங்களை வெட்டி காடழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தமை அவ்வப் பிரதேசவாசிகளினால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றது.
இந்த தேசத்தின் எல்லாப் பிரதேசங்களிலும் இடம்பெறுகின்ற இயற்கைவள அழிப்பு நடவடிக்கைளும் நிறுத்தப்படவேண்டும் அதனூடாக இந்த தேசத்தின் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.
இது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மிகவும் அடிப்படையான நிலைப்பாடென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வில்பத்து சரணலாயத்திற்குள் வடக்கு முஸ்லிம்களின் குடியேற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக ஒரு கருத்து ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்டு இலங்கையின் அரசியலில் சூடான விடயமாக மாறியிருக்கின்றது.
இவ்வாறான நிலையில் தாங்களும் வில்பத்து சரணாலயம் குடியேற்றங்களுக்காக அழிக்கப்பட்டிருப்பதாக ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றீர்கள்.
மன்னார், மறிச்சிக்கட்டி கிராமம் முஸ்லிம்களின் பூர்வீக வாழிடம், அதேபோன்று மன்னார், முள்ளிக்குளம் கிராமமும் அப்பகுதியின் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும்.
இப்பகுதிகளில் கணிசமான பிரதேசம் இராணுவத் தேவைக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கின்றது. எஞ்சிய பகுதிகளில் மக்கள் மீளக்குடியேறியிருக்கின்றார்கள்.
இவ்வாறு மக்கள் குடியேறிய பகுதிகள் ஒருபோதும் வில்பத்து வனவிலங்குகள் சரணாலயத்துக்கு உரித்தான காணிகளாக இருந்ததில்லை என்பதை இவ்விடத்தில் மிகவும் உறுதிபடக் கூறிக் கொள்கின்றோம்.
எனவே அவ்வாறு மீள்குடியேறியிருக்கின்ற மக்களின் காணிகள் சரணாலயக் காடுகளை அழித்தே பெறப்பட்டவை என்ற கருத்து தவறானது என்பதை தங்களது மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
அதுமாத்திரமன்றி, இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற அந்த மக்களின் பூர்வீகக் காணிகளும் அவர்களுக்கு மீண்டும் கையளிக்கப்படவேண்டும்.
அத்தோடு அந்த மக்களின் மீள்குடியேற்றத் தேவைகளை ஈடுசெய்துகொடுக்கவும் அரசாங்கம் முன்வரவேண்டும்.
வில்பத்து விவகாரத்தை மையப்படுத்தி இனவாத கருத்துக்களை வெளியிடுவதையும் அல்லது தமக்கான சொந்த அரசியல் நிகழ்ச்சிநிரல்களை நடைமுறைப்படுத்த முயல்வதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவ்வாறானவர்களின் விடயத்தில் தாங்கள் முன்னெச்சரிக்கையோடு செயற்படுவீர்கள் என்றும் நம்புகின்றோம்.
இவ்வாறான இனவாத ரீதியாக குறித்த விடயத்தை அணுகுவதும், அல்லது தமது சொந்த அரசியல் நிகழ்ச்சித் திட்டத்திற்காக குறித்த விடயத்தை அணுகுவதும் நீண்டகால இடப்பெயர்வின் பின்னர் அவர்களது சொந்த மண்ணிலே குடியேறுகின்ற மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்குகின்ற அல்லது அவர்களை அச்சுறுத்துகின்ற செயற்பாடாகவே அமைந்திருக்கும்.
இந்த தேசத்தில் நல்லாட்சி அரசில் இத்தகைய சமூகவிரோத நடவடிக்கைகளுக்கு தாங்கள் இடமளிக்கமாட்டீர்கள் எனவும் நம்புகின்றோம். எனவே வில்பத்து விடயத்தில் தாங்கள் முன்வைத்த கருத்துக்களை மீளாய்வு செய்து உண்மை நிலவரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம்.
மேற்படி விடயத்தில் தாங்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புகளை நல்குவதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்பதையும் தங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
2 hours ago
4 hours ago