2025 மே 15, வியாழக்கிழமை

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபையின் ஊடாக அரச நியமனங்கள் வழங்கப்படுவதாக முறைப்பாடு

Sudharshini   / 2015 ஜூலை 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா
 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபையின் ஊடாக விடுமுறை தினங்களில் அரச நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் இவற்றை தடுத்து நிறுத்துமாறும் தேர்தல்கள் ஆணையாளருக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்த்; முறைப்பாடு செய்துள்ளார்.
 
இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள்; ஆணையாளருக்கு அவர் வியாழக்கிழமை (02) அனுப்பியுள்ள முறைப்பாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபையின் ஊடாக உள்ளூராட்சி திணைக்களம், சுகாதார அமைச்சுகளுக்கான நியமனம், சிற்றூழியர் நியமனங்கள், வைத்தியசாலை சிற்றூழியர் நியமனங்கள் வழங்கப்படுவதனை அறிய முடிகின்றது.
 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கிழக்கு மாகாண சபை மூலம் அவசர அவசரமாக வழங்கப்படும் இந்நியமனங்களில் மாவட்ட விகிதாசாரமோ, இன விகிதாசாரமோ பேணப்படாது பல ஊழல்களுடன் இந்நியமனங்கள் வெளிப்பாட்டுத் தன்மை இன்றி வழங்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன. இதனால் அநேகமான தகுதி மிக்க அப்பாவி தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பாதிக்கப்படுகின்றார்கள். எனவே, தேர்தலுக்கான தயார்ப்படுத்தல் காலங்களில் மேற்படி செயற்பாடு பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நடவடிக்கையானது  தேர்தலுக்கான அரசியல் தொழில் இலஞ்சமாகவே இதனை மக்கள் கருதி எம்மிடம் முறையிடுகின்றனர். ஆகவே, தாங்கள் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
 
தேர்தல் கால தொழில் இலஞ்சமாகவும் தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவும் வழங்கப்பட்டு வரும் இவ்வாறான அரச நியமனங்கள் தேர்தல் சட்ட திட்டங்களுக்கு முரணானது.
 
கிழக்கு மகாண சபை ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்களையும் இலகுவில் ஏற்பதற்காக ஒரு சில சலுகைகளைச் செய்து விட்டு, உள்ளதையும் உரியதையும் தங்களது சமூகத்துக்கு கொடுப்பது இனச் சமத்துவத்தினை சீர்குலைக்கும் செயலாகும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .