2025 மே 14, புதன்கிழமை

கணித வினா விடைப் போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்படவிருந்த கணித வினா விடைப் போட்டிப் பரீட்சை பிறிதொரு தினத்தில் நடைபெறும் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.ரி.எம்.நிசாம் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு நடத்தவிருந்த இந்தப் பரீட்சை உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் மாணவர்களுடன் ஆசியரும் பெற்றோரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் இப்பரீட்சை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததுதுடன், அதற்காக நண்பகல் 12 மணிக்கு முன்பாக சமூகம் அளிக்குமாறு  அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுடன் குறித்த பாடசாலைக்கு நண்பகல் 12 மணிக்கு முன்பாக வருகைதந்து  வருகையை உறுதிப்படுத்தினர்.

இந்தவேளையில் பரீட்சை மண்டபத்திற்குள் மாணவர்கள் அழைக்கப்பட்டு பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பரீட்சை மண்டபத்திற்குள் பரீட்சை நடப்பதாக பெற்றோர் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் பிற்பகல் 1.30மணி வரை பரீட்சை நடத்தப்படாததை அறிந்து அது தொடர்பில் பரீட்சை அதிகாரிகளிடம் கோரியபோது பரீட்சைக்குரிய வினாத்தாள்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அறிந்துகொள்வதற்காக மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளை சந்திப்பதற்காக பெற்றோர் வளாகத்திற்குள் செல்ல முயற்சித்தபோதிலும் உரிய அதிகாரிகள் வெளியில் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மாலை 4 மணியான பின்னும் பரீட்சை நடைபெறாத நிலையில் பெற்றோர் கடும் விசனத்தை தெரிவித்திருந்ததுடன், அங்கிருந்த அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மிக நீண்ட தூரத்திலிருந்து இந்த பரீட்சைக்கு வந்ததாகவும் உரிய நேரத்திற்கு பரீட்சை ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் தாங்கள் பெரும் கஷ்;டங்களை எதிர்நோக்கியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மாகாண கல்விப்பணிப்பாளர் என்.எம்.நிசாம் கருத்து தெரிவிக்கையில், "கடந்த ஜுன் மாதம் நடாத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பரீட்சையில் அதிகளவில் திருகோணமலை மாவட்ட மாணவர்கள் சித்திபெற்றிருந்தனர். எனினும் அது தொடர்பில் பல தரப்பினராலும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு பகுதியில் அதிகளவான திறமையான மாணவர்கள் குவிந்திருப்பதை சந்தேகிக்கவேண்டிய அவசியம் இல்லை.எனினும் அந்த பரீட்சை தொடர்பில் நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு அதுதொடர்பில் ஆராயப்பட்டு மீண்டும் பரீட்சை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அந்த பரீட்சையை மீண்டும் நடாத்தவும் அன்றை பரீட்சை வினாத்தாளை அன்றைய தினமே தயாரித்து நடத்துவது எனவும் அதற்காக பிற்பகல் வேளையில் அந்த பரீட்சையை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நேற்று காலை ஒரு நிலையத்தில் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஆசிரியர்களின் வெளித்தொடர்புகளை துண்டித்து இந்த பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டது. முற்பகல் 11.30 மணியளவில் தமிழ்மொழி வினாத்தாள்கள் பூர்த்திசெய்யப்பட்டபோதிலும் ஏனைய மொழி வினாத்தாள்களை பூர்த்திசெய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த பரீட்சையில் ஆறாம் தரம் தவிர ஏனைய தரப்பரீட்சைகள் பிறிதொரு தினத்தில் நடத்தப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .