2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104வது ஜனனதினம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 104வது ஜனன தினம், எதிர்வரும் 30ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு  கொழும்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இ.தொ.கா தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் 30ஆம் திகதி காலை 07.30 மணிக்கு,  இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் அமைந்துள்ள விநாயாகர் ஆலயத்தில், விசேட பூஜை வழிபாடு நடைபெறவுள்ளதுடன், 08.30 மணிக்கு  கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு, மலர்மாலை அணிவித்தல் இடம்பெறும்.

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்  இ.தொ.காவின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான்,   நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து, 9.30 மணிக்கு, முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயத்தில் மண்டலாபிஷேகப் பூஜை  நடைபெறும்.

இப்பூஜையில், தோட்டத் தலைவர்கள், தலைவிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் இணைப்பதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அன்று நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.

மாலை  3.00 மணிக்கு,  சௌமிய பவனில் அமரரின் உருவப் படத்துக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அத்துடன், இ.தொ.கா வின் உத்தியோகபூர்வ மாத இதழான 'காங்கிரஸ்' சிறப்புப் பிரதியை,  இ.தொ.காவின் பொதுச் செயலாளர், தலைவர் ஆகியோர் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .