2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இளம் குடும்பஸ்தரின் மரணத்துக்கு நீதி கோரி அமைதி பேரணி

Editorial   / 2023 நவம்பர் 14 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் குடும்பஸ்தரான ஹட்டன் ஒஸ்போன் தோட்டத்தைச் சேர்ந்த சுரேஸ், திட்டமிட்டப்படி அவமானப்படுத்தப்பட்டதால் அவமானம் தாங்க முடியாமலேயே தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஒஸ்போன் தோட்ட பொதுமக்கள்  குற்றஞ்சாட்டுகின்றனர்.  

ஹட்டன் பஸ் நிலையத்தில்11ஆம் திகதி தரித்து வைக்கப்பட்டிருந்த ஒஸ்போன் வீதியில் பணிக்கும் தனியார் பஸ் ஒன்றில் இரு பயணிகளுக்கிடையே  ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

இந்நிலையில்,  சுரேஸ் என்ற இளம் குடும்பஸ்தர் பஸ்ஸில் உள்ள பயணிகள், சாரதி மற்றும் நடத்துனரால் சரமரியாக தாக்கப்பட்டு பின்னர் ஆடை களைந்து நிற்கவைத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தினாலேயே அவர் ஆற்றி குதிக்க வேண்டி மனநிலை ஏற்பட்டதாகவும் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். 

11ஆம் திகதி ஆற்றில் பாய்ந்த இளைஞன் 12ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அன்னாரது இறுதி கிரியைகள்  ஒஸ்போன் தோட்ட பொது மயானத்தில் செவ்வாய்க்கிழமை (14)  இடம்பெற்றது.

இந்நிலையில், இறுதி ஊர்வலத்தின் போது தோட்ட மக்கள் உட்பட ஏனைய பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த இளைஞனின் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி அமைதியான பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர். 

பெரும் எண்ணிக்கையிலானோர் பல்வேறு சுலோகங்களை எழுதிய பதாகைகளுடன் அமைதியான ஊர்வலமொனறை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது கருத்துத் தெரிவித்த தோட்ட மக்கள், 

”சுரேஸ் என்ற இந்த இளைஞன் , பஸ் நடத்துனர் ஆவார். ஹட்டன் - ஒஸ்போன் வீதியில் உள்ள பிரதேசங்களில் அவரைத் தெரியாதவர் எவரும் இருக்க முடியாது. எல்லோருடனும் மரியாதையாக விசுவாசமாக பழகும் ஒருவர். 

சம்பவதினத்தில் குறித்த பஸ்ஸில் ஏற்பட்ட பிரச்சினையினால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். இதனால், இவ்வாறானதொரு முடிவுக்கு வரவேண்டிய  நிலை அவருக்கு ஏற்பட்டது. இதுவே பிரதான காரணமாகும்.  ஆகவே திட்டமிடப்பட்ட ஒரு சதியாகவே இதனை நாம் பார்க்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறானதொரு நிலைமை இனி எவருக்கும்  வரக்கூடாது” என்றனர். . 

“இரு தரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டால் குறித்த பஸ் சாரதி சம்பந்தப்பட்டவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், இவர்கள் சேர்ந்து குறித்த நபரை தாக்குவதற்கான உரிமை யார் கொடுத்தது? ஒரு சாரதியும் நடத்துனரும் சேர்ந்து தாக்குவதற்கு என்ன உரிமை இருக்கு? பஸ் உரிமையாளரே இதற்கு காரணம். அவர் தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம்” என்றனர்.

உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் உடன்பிறவா சகோதரன் இவ்வாறு கூறுகிறார்..

“அவரை அடிக்கும் போது நான் பார்த்தேன். என்ன நடந்தது ஏன் அடிக்கின்றீர்கள் என கேட்டேன். அவர்கள்  என்னையும் அடித்தார்கள். அதன் பின்னர் அருகில் உள்ள பொலிஸாரிடம் சொன்னேன். அவர்கள் அடிக்கிறார்கள் கைது செய்யுங்கள் என்றேன், அவர்கள் கேட்கல. அவரை அடித்தது பிழை. பஸ்ஸின் சாரதி   நடத்துனர்   ஆகியோரும் இணைந்தே அவரை அடித்தார்கள். பொலிஸாருக்கும் இது தெரியும் ... ஆடைகளை  கழட்டி கிழித்துதான் வைத்திருந்தார்கள்.

சுரேஸுக்கு நடந்த மாதிரியே நாளை எங்க பிள்ளைகளுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சியம். செருப்பில் அடிக்கலாமா? செருப்பில் அடித்து அவமானபடுத்தியமையே அவரது இறப்புக்கு காரணம். சாரதி, நடத்துனருக்கு தண்டனை கொடுத்தேயாக வேண்டும் அப்போதே அவரது ஆத்மா சாந்தியடையும் என்றார்.

இந்நிலையில் மேற்குறித்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றிருந்தாலும் குறித்த இளைஞன் வசிக்கும் இடம் நோட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டமையினால், அங்கும் முறைபாட்டை தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்  13.11.2023 அன்று   இளைஞனின் பெற்றோர் முறைப்பாடு செய்வதற்காக நோட்டன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது அவர்களது முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை என பெற்றோர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X