Editorial / 2018 மார்ச் 22 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை மாவட்டத்துக்கும் நுவரெலியா மாவட்டத்துக்குமான எல்லைகளை நிர்ணயம் செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பதுளை மாவட்டச் செயலாளர் காமினி மஹிந்தபால, இவ்விடயம் தொடர்பாக, நுவரெலியா மாவட்டச் செயலாளருக்கு, உத்தியோகப்பூர்வக் கடிதமொன்றை அனுப்பி, இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பதுளை மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத் தலைவருமான சமிந்த விஜயசிறி தலைமையில், பதுளை அஞ்சல் நிலையக் கேட்போர் கூடத்தில், இன்று (22) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்தக் கூட்டத்தில், பதுளை மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பில், பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன.
காணி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
பண்டாரவளை, பிரொட்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனுமதி கிடைக்கும் வரை, வீடமைப்புத் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பதாக, பண்டாரவளை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
காணிகளை வழங்குவதற்கு, பயனாளிகள் தெரிவுசெய்யும் வேலைகள், தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலயங்களுக்கான இடங்கள் மதிப்பீடு
ஹல்துமுள்ளை பிரதேசச் செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களுக்கு, உரிய இடங்களை மதிப்பிட்டு, அதற்கான எல்லைகளை ஏற்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த ஹல்துமுல்லை பிரதேச செயலாளர், அதற்கான நிதி ஒதுக்கப்படாமையால், அந்தத் திட்டத்தைப் பூரணத்துவப்படுத்த முடியாதுள்ளதாகவும் கூறினார்.
கழிவகற்றும் முகாமைத்துவ நிலையம்
வெலிமடை பிரதேச சபைக்குரிய பகுதிகளில், கழிவுகளை அகற்றல் மற்றும் அது தொடர்பான முகாமைத்துவ நிலையமொன்றை அமைப்பதற்காக, வனவிலங்குகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியொன்றைப் பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், ஹப்புத்தளை பிரதேச சபைக்குரிய பகுதிகளில், கழிவுகளை அகற்றுவதற்கும் வனவிலங்குகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியின் இரண்டரை ஏக்கரைப் பெற்றுக்கொள்வதற்கும், பண்டாரவளை மாநகரசபை மூலம் கழிவுகள் கொட்டப்படும் பகுதிகளில், விஸ்தரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அதனைச்சூழ வாழ்ந்து வரும் குடும்பங்களை வெளியேற்றவும் முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும், இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்துதல்
பதுளை வைத்தியசாலையில், அவசர சிகிச்சைப் பிரிவை அமைப்பதற்காக, காணியொன்றைப் பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
22 minute ago
30 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
41 minute ago