2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கெசல்கமுவஓயாவை அகலப்படுத்துவது ஏன்?

R.Maheshwary   / 2022 மே 23 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ், ரஞ்சித் ராஜபக்‌ஷ

தேசிய மின் உற்பத்திக்கு பங்களிப்பு செய்யும் பிரதான நீர்த்தேக்கமான காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு நீரை விநியோகிக்கும் கெசல்கமுவ ஓயாவின் இரு புறங்களையும் அகலப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க நோர்வூட் பிரதேச சபை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் அனுமதியைக் கோரியுள்ளது.

எனினும் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் நகரிலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள தெரேசியா தோட்டம் வரை குறித்த கெசல்கமுவ ஓயாவை விரிவுப்படுத்தும் போர்வையில், பிரதேச சபை இரத்தினக் கல் அகழ்வு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

குறித்த கெசல்கமுவ ஓயா ஊடறுத்து செல்லும் டின்சின் தோட்டத்திலிருந்து தெரேசியா தோட்டம் வரையான பல பகுதிகளில் தேசிய இரத்தினக்கல் அதிகார சபையால் 2000ஆம் ஆண்டு, இரத்தினக்கல் அகழ்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

இதன்காரணமாக இரத்தினக்கல் அகழ்பவர்கள் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டதால் அங்கு பாரிய சுற்றாடல் அழிவு ஏற்பட்டதுடன், காசல்றீ நீர்த்தேக்கத்துக்கு அதிகமான சேற்று மண் அரித்துச் செல்லப்பட்டது.

இந்த நிலையில், நோர்வூட் பிரதேசசபையால் கெசல்கமுவ ஓயா மழைக்காலங்களில் பெருக்கெடுத்துச் செல்வதாகத் தெரிவித்து, அதனைத் தடுப்பதற்காக டின்சினிலிருந்து தெரேசியா வரை கெசல்கமவ ஓயாவின் இருகரைகளிலும் 6 அடியும் ஆற்றை 12 அடி ஆழமாக்கவும் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும்  மாவட்ட செயலாளரிடம் கடிதம் மூலம் மீண்டும்  கோரப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியில் மாணிக்கக் கல்  இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளமையால், அது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொடவால் தேசிய இரத்தினக்கல் அதிகாரசபைக்கு கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரஞ்சித் அலக்கோனிடம் வினவியபோது, குறித்த பகுதியில் பெகோ மற்றும் ஸ்கெவட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆற்றை அகலப்படுத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பரிந்துரைகளைப் பெற்று அகலப்படுத்தும்  நடவடிக்கையை முன்னெடுக்குமாறு நோர்வூட் பிரதேச சபை தவிசாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்  இரத்தினக்கல் அகழ்வது தனது நோக்கம் இல்லை என்றும் தாம் அகலப்படுத்த  எண்ணியுள்ள பகுதிகளில் இரத்தினக்கற்கள் இருக்கின்றமை தொடர்பில் தனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என நோர்வூட் பிரதேச்சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X