Janu / 2026 மார்ச் 05 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர் மற்றும் யுவதிகளால் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த மாதம் 23ஆம் திகதி ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் (பினவறை) வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 24 ஆம் திகதி சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த குறித்த பெண்ணின் சடலத்திற்கு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியாக இழுக்கு ஏற்படுத்தியதாக வைத்தியசாலை அதிகாரிகளால் சந்தேகம் வெளியிடப்பட்டது. இச் சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் பலத்த கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு பல நாட்களாகியும், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எவ்வித சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனை எதிர்த்து செவ்வாய்க்கிழமை (03) அன்று வைத்தியசாலை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதியளித்திருந்தது. எனினும், இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், வியாழக்கிழமை (05) அன்று நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களிலும் தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளி ஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரப்பத்தனை, நுவரெலியா, கந்தப்பளை, கொத்மலை மற்றும் இரம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர் - யுவதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட மூன்று ஊழியர்களும் உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், அவர்கள் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயல்கள் இலங்கையின் எப்பாகத்திலும் இனி நடைபெறாத வண்ணம் அரசாங்கம் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்தச் சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
3 hours ago