Editorial / 2026 மார்ச் 08 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ்
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வு என்பது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே எனவும், அவர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதே அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாகும் எனவும் முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் கொட்டகலையில் அண்மையில் இடம்பெற்ற ‘மலையக வாழ்வுரிமை மாநாட்டில்’ கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
"மலையக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களைத் தமிழ் முற்போக்கு கூட்டணியே முன்னெடுத்துள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் எங்களுக்குக் கிடைத்த நான்கு ஆண்டுகளில் உட்கட்டமைப்பு மற்றும் உரிமை சார்ந்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். ஆனால், அக்காலகட்டத்தில் எங்களைச் கடுமையாக விமர்சித்தார்கள். நான் வீடுகளைக் கட்டியபோது அவற்றை 'குருவிக்கூடு' என்று எள்ளி நகையாடினார்கள். காணிப் பத்திரங்களை வழங்கியபோது, அவை சட்டரீதியானவை அல்ல என்று கூறினார்கள். எதிர்க்கட்சியில் இருந்தபோது விமர்சித்தவர்கள், இன்று ஆட்சிக்கு வந்து என்ன செய்துள்ளார்கள்?
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது, 4,000 இந்திய வீடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் சமந்த வித்தியாரத்ன உறுதியளித்திருந்தார். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. எமது காலத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 4,000 வீடுகளையும், இலங்கை அரசாங்கத்தின் நிதியில் மேலதிகமாக 4,000 வீடுகளையும் நிர்மாணித்து, அவற்றுக்கான காணி உரிமைகளையும் மக்களுக்கு வழங்கினோம்.
கிளங்கன் வைத்தியசாலையில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் அன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால் எங்களைக் கடுமையாகச் சாடியிருப்பார்கள். ஆனால், தற்போது இந்தச் சம்பவம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? இது குறித்து நீதியான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமாகும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் அரச நிதியை வழங்க முன்மொழிந்தபோது, நாம் மக்களுக்காக அதற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதையும் விமர்சிப்பதற்கு ஒரு கூட்டம் உள்ளது. அரசாங்கம் வழங்கியுள்ள இந்த 200 ரூபாய் என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மீண்டும் ஒரு சம்பள உயர்வுப் போராட்டம் தேவைப்படும்.
எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வாகத் தொழிலாளர்களைச் சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும். இதையே நாம் தற்போதைய அரசாங்கத்திடமும் வலியுறுத்துகின்றோம். சஜித் பிரேமதாசவின் எதிர்கால ஆட்சிக் காலத்தில் இதனைச் செயற்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்" என அவர் தெரிவித்தார்.
26 minute ago
44 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
44 minute ago
45 minute ago
1 hours ago