2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தீயில் கருகி உயிரிழந்த 3 பெண்களின் மரணத்தில் சந்தேகம்?

Editorial   / 2018 ஜூலை 31 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

பசறை நகரில், தீயில் கருகிய நிலையில் இவ்வாண்டு ஜூன் 14ஆம் திகதி மீட்கப்பட்ட 3 பெண்களின் மரணத்தில் சந்தேகம் காணப்படுகிறது என, பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கையைத் தொடர்ந்தே, இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மாடி வர்த்தக நிலையமொன்றிலிருந்து தீயில் கருகிய நிலையில், இந்த 3 சடலங்களும் மீட்கப்பட்டிருந்தன.

மின்சார கோளாறே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகவிருக்கலாமெனச் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், குறித்த மூவரும் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைக்கப்பட்டுள்ளமை குறித்து, அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதென, பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கை, நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக, பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக வீரசேகர தெரிவித்தார்.

வர்த்தக நிலையக் கட்டடத்தில் தீ பரவியதன் காரணமாக, குறித்த வர்த்தக நிலைய உரிமையாளரின் தாய், சித்தி, தங்கையென, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 62, 61, 23 வயதான 3 பெண்கள் உயிரிழந்திருந்தனர்.

குறித்த வர்த்தக நிலையத்தில் தீ பரவியபோது, இவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்றுக் கதவு ஒன்று காணப்படவில்லையென்றும், வர்த்தக நிலையத்தின் பிரதான கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்தமையே இவர்கள் உயிரிழந்தமைக்கான காரணமென, ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம், பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பதுளை பதில் நீதவான் ஹேமிந்த தயாவன்ச, ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, பசறை பொலிஸாரை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.

இதற்கமைய, நச்சு மற்றும் வெப்ப காற்றைச் சுவாசித்தமையே இந்த உயிரிழப்புக்குக் காரணமென, பதுளை நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆர்.எம்.லிந்தவத்தவின் பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன.

எனினும், தீ ஏற்பட்டமைக்கான காரணத்தைக் கண்டறிய, அரச பகுப்பாய்வு அறிக்கை கோரப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த உயிரிழப்பு மண்ணெண்ணெய் மூலம் ஏற்பட்டிருக்கிறது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, 4 பொலிஸ் குழுக்களை அமைத்து, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, பதுளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தம்மிக வீரசேகர மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X