2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தொழிலாளிக்கு இழப்பீடு வழங்குமாறு உத்தரவு

Editorial   / 2017 செப்டெம்பர் 26 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

தொழில் கடமை வேளையில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு, இழப்பீடாக ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபாயை வழங்குமாறு தோட்ட நிருவாகத்துக்கு பதுளை தொழில் மன்றத் தலைவர் ஆர். ஏ. ரணதுங்க, உத்தரவிட்டுள்ளார்.

பதுளை தொழில் மன்றில் இன்று (26) தொழில் மன்றத் தலைவர் ஆர். ஏ. ரணதுங்க முன்னிலையில் மேற்படி வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

பசறை - நமுனுகலை பிளான்சேடசன் பொறுப்பிலுள்ள பிலானிவத்தை பெருந்தோட்டத் தொழிலாளியான ரெங்கையா சிற்றரசு (வயது 50) என்பவருக்கே, மேற்படி இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த தொழிலாளி,  கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி, பிலானிவத்தை தோட்டத்தில் தொழில் கடமையில் ஈடுப்பட்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாக விழுந்ததால், அவரது கை முறிந்து விட்டது.

இதையடுத்து, அத்தொழிலாளி தம்மை பிரதிநிதித்துவம் செய்யும் மலையக தொழிலாளர் முன்னணி பதுளைப் பிராந்திய அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்தார்.

பின்னர் இவ்விடயம் தொடர்பில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும், அவரின் பணிப்பின் பேரில். தொழிலாளர் நட்டஈடு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதற்கமைவாக, அவ்வழக்கு பதுளை தொழில் மன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்விசாரணையின்போது, தோட்ட நிருவாக சார்பில் தொழில் கடமையில் இல்லாத வேளையிலேயே, குறித்த தொழிலாளிக்கு விபத்து ஏற்பட்டது என கருத்து முன்வைக்கப்பட்டது.

இதனை வன்மையாக எதிர்த்த பாதிக்கப்பட்ட தொழிலாளர் சார்பில், ஆஜரான மலையக தொழிலாளர் முன்னணியின் சிரேஸ்ட தொழில் சட்ட ஆலோசகர் ஆர். சுப்பிரமணியம், குறித்த தொழிலாளி தொழில் கடமையின் போதே, விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்பதை ஆதாரத்துடன் உறுதிபடுத்தினார்.

இதன் பின்னர், பதுளை தொழில் மன்றத் தலைவர் ஆர். ஏ. ரணதுங்க, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு, இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு, தோட்ட நிருவாகத்துக்கு உத்தரவிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .