2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’பண்பாட்டை வளர்க்கவே சாகித்திய விழாவை நடத்துகின்றோம்’

Kogilavani   / 2017 ஒக்டோபர் 03 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன், சந்ரு

'எமது பண்பாட்டை பேணி பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்துக்காகவே, மத்திய மாகாண சாகித்திய விழாவை நடத்தவுள்ளோம். இவ்விழாவை நடத்துவதில் எந்தவித அரசியல் நோக்கமும் கிடையாது” என மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“சாகித்தியா விழாவுக்கான அழைப்பிதழ்கள், அனைவருக்கும் பொதுவாகவே அனுப்பிவைக்கப்படுகின்றன” என்றும், அவர் கூறினார்.

மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, நுவரெலியாவில், நேற்று(02) நடைபெற்றது. இதில் மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார அமைச்சர் மருதுபாண்டி ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஏ.பி.சக்திவேல்,  பிலிப்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போதே  அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,

'மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா, ஒக்டோபர் மாதம் 7 ஆம் 8 ஆம் திகதிகளில், நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் (சினிசிட்டா) நடைபெறவுள்ளது.

'மத்திய மாகாண சாகித்திய விழாவுக்கென பாரிய   நிதி, ஒதுக்கப்படவில்லை. போதுமான நிதி இல்லை என்ற காரணத்துக்காக, இதனை நிறுத்தி விடவும் முடியாது. எங்களுடைய கலை, கலாசாரத்தை பேணி பாதுகாக்குகின்ற கடமை, எமக்கு உள்ளது. எனவே, மத்திய மாகாண சாகித்திய விழாவை நடத்தி முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

'கடந்த காலத்தில் இருந்த அமைச்சர்கள், அனைவரும் இதனை செய்து வந்திருக்கின்றார்கள். என்னுடைய தலைமையில் நடைபெறுகின்ற இரண்டாவது சாகித்திய விழாவாக, இது அமைந்துள்ளது.

சாகித்திய விழாவின் முதலாம் நாள் நிகழ்வில், மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலுக்கா ஏக்கநாயக்க, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராதா வெங்கட்ராமன் ஆகியோரும், இரண்டாம் நாள் நிகழ்வில், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

விழாவில் தமிழர்களின் கலை, கலாசார நிகழ்வுகளும் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

சாகித்திய விழாவின்போது, 25 பேர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர். இதற்கு எங்களுக்கு சுமார் 100 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அதற்காக ஒரு குழுவை அமைத்து, மிகவும் சுயாதீனமான முறையில் 25 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் எழுத்தாளர்கள், சமூக சேவையாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு தரப்பினரும் உள்ளடங்குகின்றனர்.

எமது சமூகம், படிப்படியாக எமது கலைகளை மறந்து வருகின்றது. எனவே, அவர்களும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடனேயே, இந்த விழா முன்னெடுக்கப்படுகின்றது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .