Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மே 15 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
மாத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வரை, எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, மாத்தளை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.பி.எச்.எம்.பிரேமசிறி, நேற்று முன்தினம் (14) மாலை உத்தரவிட்டார்.
வங்கியில் அடைவு வைக்கப்பட்ட, ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டகத்தையே, இச்சந்தேகநபர்கள் உடைக்க முயன்றுள்ளனரென, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வர்த்தகர் ஒருவரும் (இவர் மேற்படி வங்கியின் முன்னாள் முகாமையாளரின் கணவர்), பால் சேகரிப்பு மத்திய நிலையத்தின் முகாமையாளர், சாரதி ஒருவர் ஆகியோர் உட்பட நால்வரே கைதுசெய்யப்பட்டு, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 6ஆம் திகதி வங்கிக்குள் நுழைந்த சந்தேகநபர்கள், 7ஆம் திகதி வங்கியை விட்டு வெளியேறும் போது, குறித்த சேமிப்புப் பெட்டகத்தை உடைக்க முயன்ற போதிலும், அந்த முயற்சி தோல்வியடைந்ததென, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வங்கிக்கு அருகிலுள்ள சி.சி.டி.வி காணொளிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான மோட்டார் சைக்கிள் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த போதே, சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேகநபர்களை நேற்று முன்தினம் கைதுசெய்த பொலிஸார், இவர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கார், மோட்டார் சைக்கிள், பெட்டகத்தை உடைப்பதற்காகக் கொண்டு வந்த எரிவாயு சிலின்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .