2025 மே 15, வியாழக்கிழமை

மது வேண்டாம்: மாது கோரிக்கை

Freelancer   / 2023 மார்ச் 03 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாகுடுகலை தோட்டத்தில் 15 வருடங்களுக்கு  பின் தலை தூக்கியுள்ள சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க  பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாகுடுகலை தோட்ட பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாகுடுகலை தோட்டத்தில்  கடந்த 15 வருடங்களுக்கு முன்னர், இரு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மது அருந்திவிட்டு மோதலில்  ஈடுப்பட்டனர். அதன்போது   அதில் பெண்ணொருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இந்த சம்பவம் மாகுடுகலை தோட்டத்தை அண்மித்த மாகுடுகலை சிறிய நகர் பகுதியில் அமைந்திருந்த மது விற்பனை நிலையத்தில் மது அருந்தி விட்டு வந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களால் நடந்தேறியது.

இவ்வாறு மது அருந்தி வீடு திரும்பும் ஆண்கள் தங்களின் வீடுகளில் தினமும் சண்டையிட்டு தோட்ட மக்களின் நிம்மதிக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாகுடுகலை தோட்டத்தை அண்மித்த சிறிய நகரில் இயங்கி வந்த மது விற்பனை நிலையத்தை மூடிவிட வேண்டும் என இத் தோட்டத்தில் வசித்து வந்த இரு பெண்கள் முன்னெடுத்த முயற்சியினால் இதற்கு ஆதரவு வழங்கிய தோட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து போராட்டத்தை மேற்கொண்டு  மதுபான விற்பணை நிலையத்தை மூடிவிட்டனர்.

அன்றிலிருந்து 15 வருடங்களாக மாகுடுகலை தோட்டத்தில் மது பாவனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தோட்ட மக்களின் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்க்கையை நடத்தி வந்ததாக தோட்டப் பெண்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில்  தோட்டத்தில் மூன்று நபர்கள் சட்ட விரோதமாக மது விற்பனையைச் செய்கின்றனர்.இவ் மது விற்பனை லயன் குடியிருப்பு வீடுகளில்  செய்யப்படுகிறது.

இதன் காரணமாக வியாபாரிகளின் வீடுகளுக்கு, இரவு வேளையில் மது அருந்த வரும் நபர்கள் அங்கு மது அருந்திய பின் கூச்சல் இடுவது,அநாகரிகமாக நடந்துக்கொண்டு தகாத  வார்த்தைகளை பிரயோகிப்பது, அத்துடன் சண்டைகள் போட்டுக்கொள்வது போன்ற செயல்களால் ஈடுப்படுகின்றனர் என்றும் அந்தத் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அருகில் உள்ள குடியிருப்பாளர்கள்,பாடசாலை செல்லும் மாணவர்கள், நோயாளிகள் என பலர் நிம்மதி இழந்து வருவதாகவும்,  பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இராகலை மற்றும் ஹய்பொரஸ்ட்  பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொலிஸார் தவறி வருவதால் இத்தோட்டத்தில் சட்டவிரோத மது விற்பனை வலுவடைந்து வருவதாகவும் தோட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, மாகுடுகலை தோட்டத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழவும், சமூக சீர்கேடுகளில் இருந்து இத் தோட்ட மக்களை பாதுகாக்கவும்,மாணவர்கள் நிம்மதியாக கல்வி கற்கவும் வழிசமைக்க வேண்டுமென  தோட்ட பெண்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

அதற்கு தோட்டத்தில் தலைதூக்கியுள்ள மது விற்பனையை தடை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலம் தாழ்த்தாத நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மாகுடுகலை தோட்டப் பெண்கள் கோரிக்கை விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .