2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’முன்பள்ளிகளை மாகாணசபை மேற்பார்வை செய்ய வேண்டும்’

Kogilavani   / 2017 செப்டெம்பர் 24 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மத்திய மாகாணத்தில் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளை, மாகாணசபை மேற்பார்வை செய்ய வேண்டுமென்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

“மத்திய மாகாணத்தில் குறிப்பாக பெருந்தோட்டங்களில் இயங்குகின்ற முன்பள்ளி நிலையங்களை, சில அரச சார்பற்ற நிறுவனங்கள் முறைகேடான முறையில் நடத்தி வருகின்றன என்று, பொதுமக்கள் எமக்கு முறைபாடு செய்துள்ளனர்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“நுவரெலியா மாவட்டத்தில் இயங்கிவருகின்ற சில அரச சார்பற்ற நிறுவனங்கள், முன்பள்ளிகளை மொத்த விலைக்கு குத்தகைக்கு எடுத்துள்ளதைப் போன்று, தனியாதிக்கம் செலுத்திவருகின்றன.

“முன்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவருக்கும் 650 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை அறவிடப்படுகின்றது.

அதுவும் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்திலிருந்து மொத்தமாக கழித்து பெறப்படும் பணத்தில், ஒரு சிறு தொகையை மட்டும் முன்பள்ளியில் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு வழங்கிவிட்டு, மிகுதியை அரச சார்பற்ற நிறுவனத்தை நடத்தி வருபவர்கள் பங்கிட்டுக்கொள்வதாக, மக்கள் முறைபாடு தெரிவிக்கின்றனர்.

“மத்திய மாகாண சபையில், முன்பள்ளிகளை முகாமை செய்வதற்கான சட்டவிதிகள் அமுலில் உள்ளது.

“இந்நிலையில், பெருந்தோட்ட பகுதிகளில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றால் பல கிளைகளை வைத்துக் கொண்டு இயங்குகின்ற முன்பள்ளிகளை ஏன் மத்திய மாகாண சபையால் மேற்பார்வை செய்ய முடியவில்லை?

“இந்த விடயத்தில், முதலமைச்சர் கூடியக் கவனம் செலுத்த வேண்டும். இந்த அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி கிடைக்கின்றபோது ஏன் தொழிலாளர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது?
“இந் நிறுவனங்கங்களை அரச கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

பெருந்தோட்ட பகுதிகளுக்கு உள்ளுராட்சி மன்றங்களிணூடாக வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும். இந்நிலையில் பெருந்தோட்டங்களில் உள்ளுராட்சி மன்றங்களினூடாக முன்பள்ளிகளை நடத்த முடியும்.

இங்கு பணிபுரியும் ஆசிரியைகளுக்கு அதிக சம்பளத்தையும், கூடுதலான பயிற்சிகளையும் வழங்க முடியும். இந்த விடயத்தையும் கவனத்தில் எடுத்துகொள்ளமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்” எனவும், மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .