2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தம்புள்ளை சம்பவத்திற்கு கண்டனம்

Kogilavani   / 2013 நவம்பர் 05 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

'தம்புள்ளை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் விக்கிரகம் உடைக்கப்பட்டு தற்போது ஆலயமும் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமையானது இந்தநாட்டிலே இந்து மக்களுக்கும் வாழிடச் சுதந்திரமும், மதச் சுதந்திரமும் இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது' என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

தம்புள்ளை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயம் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்  சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு  அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு  குற்றம் சுமத்தியுள்ளார்.

அக் கடித்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தம்புள்ள கிராமத்தில் தம்புள்ள பிரதான வீதியை அண்டி வாழும் 42 குடும்பங்களை சேர்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட மதவெறி கொண்ட விசமிகளின் சதி முயற்சி காரணமாக கடந்த ஆனி மாதமளவில் காணியில் இருந்து எழுப்பப்பட்டு நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அவர்கள் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த இக்காணியில் குளம் அமைப்பதற்கு புனித பூமி திட்டத்தில் ஏற்பாடு செய்தமை மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு அம்மக்களால் 40 வருடத்துக்கு மேலாக வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் விக்கிரகம் உடைக்கப்பட்டு தற்போது ஆலயமும் உடைக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம். இச்செயற்பாட்டின் பின்னணியில் உள்ளவர்களையும், இவ்வாலயத்தை இடித்தவர்களையும் அரசாங்கம் கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

அத்தோடு முன்பு இவ்வாலய மூலவிக்கிரகம் உடைக்கப்பட்ட போது இவ்வாலயத்திற்கென பிறிதொரு இடம் வழங்கப்படுவதாக மதவிவகார அமைச்சரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இச்செயற்பாடு இன்னும் நடைபெறவில்லை.

இங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கும் இன்னும் வேறு இடம் வழங்கப்படவில்லை. இந்நிலை இந்நாட்டில் தற்போது தமிழ் மக்களுக்கும், இந்து மக்களுக்கும் வாழிடச் சுதந்திரமும், மதச் சுதந்திரமும் இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து சிங்கள பாடசாலைகளில் கல்வி கற்று வாழும் இத்தமிழ் மக்களின் நிலை தங்களது ஆட்சியில் தான் துன்ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இத்தமிழ் மக்களுக்கு இத்துன்பம் வரவில்லை. ஆனால் இன்று பல வகையில் வேதனைப் படுத்தப்படுகின்றனர்.

எனவே இந்நாட்டின் தலைவர் என்ற முறையில் இதனை தீவிரமாக விசாரித்து கண்டுபிடித்து ஆலயத்தை இடித்தவர்களுக்கும், விக்கிரகத்தை உடைத்தவர்களுக்கும் சட்டத்தி;ன் முன் தண்டனை பெற வழி செய்வதுடன், இடிக்கப்பட்ட இவ்வாலயத்திற்கு ஏற்ற வேறு ஒரு இடத்தை வழங்கி மீண்டும் இவ்வாலயம் அமைக்கப்படவும், வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் ஓர் இடத்தில் சகல வசதியுடனும் குடியேற்றப்படவும் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றேன்' என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .