2025 ஜூலை 17, வியாழக்கிழமை

4 வயது மகளை அடித்து துன்புறுத்திய தாய் கைது

Sudharshini   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

தனது நான்கு வயது மகளை அடித்துத் துன்புறுத்திய தாயொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போற்றி தோட்டத்தில் நேற்று திங்கட்கிழமை (09) இடம்பெற்றுள்ளது.  
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த சிறுமியின் தந்தை கொழும்பில் வேலை செய்யும் நிலையில் தாய், தோட்டத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றார். இந்த தாய் இதற்கு முன்னரும் பல முறை அச்சிறுமியை துன்புறுத்தியதாக சிறுமியின் பாட்டனாரால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்கு தாயை  வரவழைத்த பொலிஸார், அவருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி, அனுப்பி வைத்திருந்தனர். 

இந்நிலையில், தான் தோட்டத்தில் வேலை செய்வதால், மேற்படி சிறுமியை தோட்டத்திலுள்ள சிறுவர் பாராமரிப்பு நிலையத்திலேயே விட்டுச் செல்வார். வழமைப்போல ஞாயிற்றுக்கிழமை (08) சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் சிறுமியை விட்டுச் சென்றுள்ளார். பராமரிப்பு நிலையத்தில் எழுந்து நடமாட முடியாத அளவுக்கு அச்சிறுமியின் கால்களில் காயத்தை கண்ட பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர், காரணத்தை சிறுமியிடம் கேட்டறிந்த பின்னர் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து, குறித்த சிறுமியின் தாயை கைது செய்த பொலிஸார், சிறுமியை டிக்கோயா, கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்தனர். குறித்த சிறுமி, வீட்டில் குளப்படி செய்வதாகவும் அதனாலேயே தான் அடித்ததாகவும் பொலிஸ் விசாரணைகளின் போது சிறுமியின் தாய் கூறியுள்ளார். 

இந்நிலையில், தாயை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X