Princiya Dixci / 2016 ஜனவரி 19 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு கல்வி வலயத்துக்குட்பட்ட ராகமை பட்டுவத்தை வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி பாடசாலையின் பெற்றோர்கள் நீர்கொழும்பு வலயக் கல்விக் காரியாலயம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை (19) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாடசாலை அதிபர் தமயந்தி சேரம் என்பவருக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அதிபரின் நிர்வாகத்தில் காணப்படும் குறைபாடுகள், மாணவர்களின் ஒழுக்க வீழ்ச்சி, நிதி மோசடி என்பவைகள் காரணமாக பாடசாலை அதிபரை இடமாற்றுமாறு பாடசாலை முன்பாக பெற்றோர்கள், இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நீர்கொழும்பு கல்விக் வலய அதிகாரிகளை, ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருமாறு பெற்றோர்கள் கோரிய போதிலும் அதிகாரிகள் வருகை தராததன் காரணமாக பின்னர் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்பாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் அவர்கள் ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பினர்.
பெற்றோர்கள் சிலர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த அதிபர் தொடர்பாக வலயக் கல்வி அதிகாரிகளுக்கு இதற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தோம். ஆனால், அதிபரை இடமாற்றம் செய்யவில்லை. அதிபரின் ஆளுமையற்ற நிர்வாகம் காரணமாக பாடசாலை மாணவர்களிடத்தில் ஒழுக்கக் குறைபாடுகள் காணப்படுகின்றன.
மாணவர்களில் சிலர் சிகிரெட் புகைத்தல் மற்றும் கசிப்பு அருந்துதல் உட்பட பல்வேறு தீய செயல்களைப் புரிகின்றனர். அதிபர் முறையற்ற விதத்தில் பெற்றோர்களிடமிருந்து பணம் சேகரித்துள்ளார்.
அத்துடன், பாடசாலையில் மூன்றாம் மாடியில் அமைந்துள்ள வகுப்புகளுக்கு சில ஆசிரியர்கள் கற்பிக்கச் செல்வதில்லை. அதிபருக்கு எதிராக குரல் எழுப்பும் பெற்றோர்களை அதிபர் பலிவாங்குகிறார் எனத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை அடுத்து நீர்கொழும்பு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரனி பெர்ணான்டோவின் அலுவலகத்தில் பெற்றோர் பிரதிநிதிகள் சிலருடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
குறித்த அதிபரை நாளைய தினம் முதல் பட்டுவத்தை வித்தியாலயத்துக்கு கடைமைக்காக அனுப்புவதில்லை என வலயக் கல்விப் பணிப்பாளர் அங்கு வாக்குறுதியளித்தார்.
அதிபரை இடமாற்றம் செய்யாவிட்டால் இனிவரும் தினங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் என பெற்றோர்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .