Princiya Dixci / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
பாடசாலை மாணவர்களுக்கு இலவச சீருடைத்துணிகளுக்குப் பதிலாக அரசாங்கத்தினால் இம்முறை வழங்கப்பட்ட பண வவுச்சர்கள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை பெற்றோர்கள் முன்வைக்கின்றனர்.
குறித்த வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரம்ப பிரிவு (தரம் 1 முதல் 5 வரை) மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலைக்கு வரவேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் நாட்கூலிக்கு வேலைசெய்யும் தாம், தொழிலுக்குச் செல்லாமல் வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்காக பாடசாலைகளுக்குச் சென்று நீண்ட வரிசையில் காத்து நின்று பண வவுச்சர்களைப் பெற வேண்டியிருந்தாகவும் 420 ரூபா முதல் 720 ரூபா வரையான பெறுமதியுடைய பண வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்காக தமது நாளாந்த வருமானத்தை இழக்க வேண்டி ஏற்பட்டதாகவும் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
பாடசாலைக்குச் செல்லவதால் போக்குவரத்துக்கு பணத்தைச் செலவிட வேண்டியுள்ளதுடன், பண வவுச்சர்களைப் பெற்ற பின்னர் மீண்டும் துணிகளை வாங்க பணத்தைச் செலவிட்டு கடைகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் துணிகளுக்கு பதிலாக பண வவுச்சர் பெறுவது எமக்கு நட்டமாவே உள்ளது. தொழிலுக்குச் சென்றால் எமக்குக் கிடைக்கும் நாளாந்த வருமானம், பண வவுச்சரை விட அதிகம்.
அன்றாடம் தொழில் செய்து சம்பாதிக்கும் பெற்றோர்கள் அதன் மூலமாக பாதிக்கப்படுகின்றனர். முன்னர் வழங்கப்பட்ட சீருடைத்துணி வழங்கும் முறையே இலகுவானது எனப் பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும், நீர்கொழும்பு நகரிலுள்ள சில பாடசாலைகளில் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பண வவுச்சர்கள் வழங்கப்படவில்லையென நீர்கொழும்பு வாழ் பெற்றோர்கள் சிலர் தெரிவித்தனர். பாடசாலைகளுக்கு உரிய தினத்தில் போதியளவு வவுச்சர்கள் கிடைக்காமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வருட இறுதியில் வழங்கப்படும் பாடசாலை விடுமுறையில் அதிக வேலைப்பளு உள்ளமையால் வவுச்சர்களை வழங்க புதிய பணிகளினால் தாமும் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக ஆசிரியர்கள் சிலரும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .