2021 ஜூன் 16, புதன்கிழமை

தவறிழைப்பவர்களுக்கு உயர்ந்தப்பட்ச தண்டனை

Gavitha   / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொர்ணகுமார் சொரூபன்

'போர்ச்சூழலுக்குள் அகப்பட்ட தருணத்தில் அனைத்தையும் இழந்த போதும் இரண்டு பெண்களும் தங்களின் கற்பை பாதுகாத்திருந்த நிலையில், போரற்ற சூழலில் அவர்களின் கற்பு பறிக்கப்பட்டமை பாரிய குற்றமாகுமாகும்'  என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, விசுவமடு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தி மற்றுமொரு பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 4 இராணுவச் சிப்பாய்களுக்கும் தலா 25 வருடங்கள் கடூழியச்சிறைத் தண்டனை மேல் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட போது, தனது தீர்ப்பை வாசிக்கும் போதே நீதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 2009ஆம் ஆண்டு யுத்தத்தினால் வெளியேறிச் சென்ற பெண்கள், தங்கள் உடமைகள் அனைத்தையும் இழந்து, இராமநாதன் முகாமில் வசித்ததுடன் அரசாங்கம், இராணுவம் ஆகியவற்றின் அனுமதியுடன் முகாமிலிருந்து விடுதலையாகி, தமது சொந்த இடத்தில் மீளக்குடியேறி குடிசையில் வாழ்ந்து வந்தனர்.

குறித்த பெண்களின் வீட்டின் அருகில் இருந்த இராணுவ முகாமில், கடமையில் இருந்த நேரத்தில், இந்த 4 பாதுகாப்பு படையினரும், போர்ச்சூழலில் காப்பாற்றி வந்த அந்தப் பெண்களின் மானத்தை பறித்துள்ளனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய பாதுகாப்பு படையினரே இவ்வாறான செயலில் ஈடுபட்டமை ஏற்றுக்கொள்ள முடியாது. இது உயர்ந்தபட்ச தண்டனைக்குரிய குற்றமாகும்.

இது, இந்த நாட்டு இராணுவத்தினரின் நற்பெயரைக் கெடுத்த செயலாகும். இலங்கை இராணுவத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உயர்ந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

வன்புணர்வு குற்றம் என்பது சர்வதேச குற்றம், அத்துடன் அது ஒரு போர்க்குற்றம், மனித நேயத்துக்கு எதிரான குற்றம் என ஐ.நா யுத்தக்குற்ற நீதிமன்ற சட்டங்களிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டங்களிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .